பக்கம்:காகித உறவு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒரு ஏழைப் பெண்ணின் வாள்

ந்தச் சிறுமி செல்லக்கிளிக்கு ஆங்கிலத்தில் அதிர்ஷ்டம் கெட்டதாகக் கூறப்படும் எண்ணளவு வயதிருக்கலாம். குற்றால மலையில் சற்று உயரத்தில் மரக் கொம்புகளை விறகுகளாக்கும் பணியில் அவள் ஈடுபட்டிருந்தாள். பாவாடையைச் சற்றுத் துக்கி இடுப்பிலே சொருகியிருந்ததால், அவள் முழங்கால்களும் சுள்ளி விறகுகளைப் போலவே தோன்றின. ஜாக்கெட் என்று கூறப்படும் ஒட்டுக் கந்தையின் முன் பக்கம் இரண்டு மூன்று ஊக்குகளால் பூட்டப்பட்டிருக்க, பின் பக்கம் பல பொத்தல்கள்; அவள் விறகுகளை ஒடிக்கும் கைகளைப் பார்த்தால் ஒரு கொம்பு இன்னொரு கொம்பை ஒடிப்பது போலவும், அவள் தனக்கு மாற்றுக் கால்கள் மாற்றுக் கைகள் தயாரித்துக் கொண்டிருப்பது போலவும் தோன்றும். மனிதனுக்குப் பயப்பட்டுப் பதுங்கும் புலியைப் போல, புலிக்குப் பயந்து தன்னை மறைத்துக் கொள்ளும் மானைப் போல புதர்களுக்குள் தன்னை மறைத்துக் கொண்டே விறகுகளை ஒடித்தாள். காட்டிலாகா அதிகாரிகள் குறிப்பாக ரேஞ்சர் தான் அவளுக்கு வேங்கைப் புலி. ஒரு தடவை விறகுகளை ஒடிக்கும்போது விறகும் கையுமாகப் பிடிபட்டு, அந்த விறகுகளில் ஒன்றாலேயே அடிபட்டு, அந்த விறகளவிற்கு முதுகில் வீக்கம் பெற்றவள். ஆகையால் ஒரு தடவை உணவைக் கொத்தும் காகம், பல தடவைத் திரும்பிப் பார்ப்பது போல் அவள் ரேஞ்சரை எச்சரிக்கையாகப் பார்த்துக் கொண்டாள்.

ஆயிற்று. கட்டு விறகு சேர்ந்து விட்டது. அவற்றைக் காட்டுக் கொடிகளால் கட்டி மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் விறகுக்கடையாரிடம் கொடுத்தால் ஒரு ரூபாய் கிடைக்கும். அதை வைத்து அங்கிருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ள வீட்டில் படுக்கையில் கிடக்கும் அம்மாவுக்கு அரிசி வாங்கிச் சமைத்துப் போடலாம்.

மணி 11-30 ஆகிவிட்டது. இப்போது புறப்பட்டால்தான் வீட்டிற்கு இரண்டு மணிக்குப் போய் சேரலாம். செல்லக்கிளி திடீரென்று சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். 'அய்யய்யோ ரேஞ்சரா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/69&oldid=1384264" இலிருந்து மீள்விக்கப்பட்டது