பக்கம்:காகித உறவு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

ஒரு ஏழைப் பெண்ணின் வாள்



மருண்டு போன செல்லக்கிளி மகிழ்ச்சியடைந்தாள் அழகான ஒரு கார், டிரான்ஸிஸ்டர் ஒலிக்க இரண்டு குமரிப் பெண்கள் சிரிக்க, இரண்டு வாலிபர்கள் குதிக்க, ஒர் ஏழு வயதுப் பாப்பா சிணுங்க, ஐம்பது வயதுக் கண்ணாடி ஆசாமியும், அவரை ஒரு காலத்தில் கைப்பிடித்ததுபோல் தோன்றிய நடுத்தர வயதுப் பெண்மணியுடன் இறங்குவதற்காகக் குலுங்கி நின்றது. சீமை நாயும் இருந்தது; இறங்கியது.

செல்லக்கிளி கீழே நின்ற அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றாள். விறகைக் கட்டினாள்.

அருவிக்கு அப்பால் ஒரு சிறு குன்றின் அருகேயுள்ள பசும் புல்தரையில் வயதான அம்மாள் ஒரு சிவப்புக் கம்பளியை எடுத்துப் போட்டாள். கண்ணாடி மனிதர் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார். கூடை நிறைய இருந்த ஆப்பிள் பழங்கள், தெர்மாஸ் பிளாஸ்க், உருளைக் கிழங்கு, உப்புப் புளி வகையறாக்களைக் கொண்ட எவர்சில்வர் பாத்திரம்; ஒர் அலுமினியப் பாத்திரம் - இன்ன பிற.

பாத்திரங்களை வாங்கி வைத்த அம்மாவுக்குக் கை வலித்திருக்க வேண்டும். வாய் வலிக்கும்படியாக கேட்போருக்கு காது வலிக்கும்படியாக “ஏண்டி... அங்கேயே நின்னா எப்டி? கொஞ்சம் ஒத்தாசை பண்ணுங்க..." என்று கத்தினாள்.

வாலிபப் பெண்களில் குதிரை மாதிரி கொண்டையின் பின் பகுதி தூக்கி நிற்க, நின்றவள் மூத்தவளாக இருக்க வேண்டும் தன் பங்குக்கு இரண்டு எவர்சில்வர் டம்ளர்களை எடுத்துக் கொடுத்து ஒத்தாசை செய்தாள். இன்னொருத்தி ஒரு பையனுடன் உலவிக் கொண்டிருந்தாள். ஏழு வயதுப் பாப்பா, அவர்களோடு போகலாமா அல்லது வயதானவர் பக்கம் போகலாமா என்று யோசித்து விட்டு, பின்பு கார் பக்கம் நின்ற நாயின்மீது லேசாக சாய்ந்து கொண்டு நின்றது.

"ஸ்டவ்வ எடுத்துட்டு வாங்கோ!'

கண்ணாடி மனிதரின் முதுகு காருக்குள் போனது. பிறகு டிக்கியைத் திறந்தார். ஸ்டவ் இல்லை - இல்லவே இல்லை. "அங்க இருக்கான்னு பாரு" என்று டிக்கிக்குள் இருந்தே குரல் கொடுத்தார். வயதான அந்தப் பெரியம்மா பலங்கொண்ட மட்டும் கத்தினாள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/70&oldid=1383320" இலிருந்து மீள்விக்கப்பட்டது