பக்கம்:காகித உறவு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

பண்டாரம் படுத்தும் பாடு


வந்து அரை பல்டி அடிக்கப் போகிறவர் போல் நெளிந்து நின்றதைப் பார்த்துச் சுதாரித்துக் கொண்டார்கள்.

“ஸார் ஒங்க விஸிட் ஸர்பிரைஸா இருக்கே” என்று சொன்ன அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீஸ்ரைப் பார்த்து அர்த்த புஷ்டியாகச் சிரித்துக்கொண்டே, “ஹர இஸ் பண்டாரம்? வேர் இஸ் பண்டாரம்? வாட் இஸ் பண்டாரம்?” என்று சத்தமாகச் சொன்னார் தேஷ்முக்.

அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீசர் அவரை அழைத்துக் கொண்டு, பண்டாரத்தின் முன்னால் நிறுத்தி, “ஹி இஸ் பண்டாரம்... அக்கெளண்டண்ட் பண்டாரம்...” என்று சொல்ல நினைத்தாரே தவிர, நாக்கு நினைத்ததை ஒலியாக்கவில்லை.

தேஷ்முக் கடுவன் பூனையானார். பண்டாரம் போட்ட ‘சல்யூட்டை’ப் பொருட்படுத்தவில்லை.

“மிஸ்டர் பண்டாரம்... வேர் இஸ் கேஷ் பாக்ஸ்? கேஷை செக் பண்ணனும்.”

பண்டாரம் வெலவெலத்துப் போனான். ஆபீஸ் இம்ரஸ்ட் பணம் ஐந்நூறில், கொஞ்சம்தான் இருக்கு. ஐந்து ஆசாமிகளுக்கு வார வட்டிக்கு விட்டிருக்கிறான். நாளைக்குத்தான் சம்பள நாள். பாவிப் பயல்கள், நாளை மறுநாள்தான் கொண்டு வருவார்கள்.

“கமான். கிவ் மீ தி கீ...”

கிருபாகரன் சிரித்துக் கொண்டான். பயலுக்கு வேணும்!

“ஜ. லே. பண்டாரம் சாவியைக் கொடுங்க”.

பண்டாரம் கதி கலங்கிப் போனான். அதே சமயத்தில் ‘சாவியை கொடுங்க’ என்ற வார்த்தை அவனுக்கு ஒரு சுபசகுனமாக ஒலித்தது. மூளையில் ஏதோ ஒரு ஸெல் ஒரு பிராடுத்தனத்துக்கு ‘ஐடியா’ கொடுத்தது.

பண்டாரத்துக்குப் புதுத் தெம்பு பிறந்தது. “நல்லா... பாருங்க... ஸார்... எதைத் தொட்டாலும் கேஷை மட்டும் தொடமாட்டேன். இந்தாங்க... சாவி... இந்தாங்க...”

தேஷ்முக் ஸிரியஸ்ஸாக முகத்தை வைத்துக்கொண்டு கேஷ் புக்கைப் பார்த்தார். 310-90 ரூபாய் பாலன்ஸ் இருக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/80&oldid=1383354" இலிருந்து மீள்விக்கப்பட்டது