பக்கம்:காகித உறவு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

பண்டாரம் படுத்தும் பாடு


“நானும் அதைத்தான் சொல்றேன். மரியாதையா. எடுத்த பணத்தை பாக்சிலே போடுங்க. இல்லேன்னா 199-க்கு போன் பண்ண வேண்டியது வரும். அதோட மான நஷ்ட ஈடு வழக்கு போட வேண்டியதிருக்கும்.”

பண்டாரம் தவிர, எல்லோருமே, அதிர்ந்து போனார்கள். டெபுடி டைரக்டர் தேஷ்முக் முக்கினார்.

“ஏய். என்னையா. ஒரு டெபுடி டைரக்டரைய்யா... திருடன்னு சொல்றே. நான் சரியாத்தான் எண்ணினேன்... சரியாத்...”

“நீங்க எப்படி லார் எண்ணலாம்?... என்னை எண்ணச் சொல்லி இருக்கணும். நீங்களே... எண்ணி எடுத்துக்கிட்டால் நானா பொறுப்பு? நல்லவனுக்குக் காலமில்லங்கறது சரிதான்...?”

அட்மினிஸ்ரேட்டிவ் ஆபீசர் அதிர்ந்து போனார். அலுவலக ஊழியர்கள் பண்டாரத்தை மனதுக்குள் வேண்டா வெறுப்பாகப் பாராட்டினார்கள். கிருபாகரனுக்குக் கிறுக்குப் பிடிக்கும் போலிருந்தது. தேஷ்முக்கின் கண்களில் நீர் தேங்கிவிட்டது. கொட்ட வேண்டியதுதான் பாக்கி.

விஷயம், டைரக்டருக்கு எஸ்.டி.டி.யில் சொல்லப்பட்டது. அவரிடம் பேசிக் கொண்டிருந்த தேஷ்முக்கின் கண்ணீர் டெலிபோனை நனைத்தது.

பண்டாரத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. “பணத்தை செக் பண்ணப்போகும் அதிகாரிகள் பணத்தைத் தொடக்கூடாது. சம்பந்தப்பட்ட நபரை, பணத்தை எண்ணிக் காட்டும்படிக் கூற வேண்டும்” என்று டைரக்டரால் சர்க்குலர்தான் போட முடிந்தது.

எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்ட டெபுடி டைரக்டர் தேஷ்முக். சீனியர்அதிகாரி அதோடு டைரெக்டருக்கு வேண்டியர். ஆகையால் அவர்மேல் ஆக்ஷன் எடுக்கப்படவில்லை. மாறாக, திரித்தவரைக்கும் கயிறு என்ற மனோபாவத்தில், தானுண்டு, தன் பிள்ளைகுட்டிகள் உண்டு என்று இருந்த அடமினிஸ்டிரேட்டிவ் ஆபீசர் தமது பிள்ளைகுட்டிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு அந்தமான் கிளைக்கு மாற்றப்பட்டார்.

பண்டாரம் தன்னை மாற்றினால் கோர்ட்டில் ரிட்போடப்போவதாக ஜாடைமாடையாகப் பேசினான். தானே ‘உண்மை விளம்பியாக மாறி, பண்டாரம் ரிட்டுக்குத் துடித்துக் கொண்டிருக்கிறான். அவனை ‘ஹிட்’ பண்ணாதீர்கள் என்று மொட்டைத்தனமாக எழுதிப்போட்டான். பிறகு, பலனைப் பற்றிக் கவலைப்படாத கர்மயோகியாகக் காட்சியளித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/82&oldid=1383369" இலிருந்து மீள்விக்கப்பட்டது