பக்கம்:காகித உறவு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

81


இன்னொரு பெரிய வேலைக்கு அடிபோட்டுக் கொண்டு இருந்த டைரக்டர் கோர்ட் வழக்கு எதற்கு? என்று நினைத்துச் சும்மா இருந்துவிட்டார்.

கிருபாகரனால் சும்மா இருக்க முடியவில்லை.

பல்லைக் கடித்துக் கொண்டான். கட்டுண்டான்; பொறுத்திருப்பான். காலம் மாறும்.

காலம் மாறி வந்தது.

பண்டாரம், லீவில் இருக்கையில், கிருபாகரன், எஸ்டாபிளிஷ் மெண்ட் செக்ஷன் கிளார்க் கோடு பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு மோசடி தெரியவந்தது. பண்டாரம் ஆபீஸ் விஷயமாக, குறிப்பிட்ட ஒருவாரம் டெல்லியில் இருந்திருக்கிறான். அதற்காக டி.ஏ போட்டிருக்கிறான். ஆனால் அதே வாரம் சென்னையில் மருத்துவ சிகிக்சை பெற்றதாக மெடிக்கல் பில்லும் போட்டிருக்கிறான் எப்படி?

கிருபாகரன், மொட்டைப் பெட்டிஷன் எழுதவில்லை. முழுக் கையெழுத்தோடு தட்டிவிட்டான் ஒரு பெட்டிஷனை.

டைரக்டர் ‘விட்டுத் தொலைக்கலாம்’ என்றார். ஆனால் சூடுபட்ட தேஷ்முக் ‘பண்டாரத்தைத் தொலைக்கவும்’ என்றார். அதே சமயம் தாமே விசாரணைக்குப் போக மறுத்துவிட்டார்.

இறுதியில் சரியாகக் கண்ணும் தெரியாத காதுங் கேட்காத ரிட்டயர் ஆகும் தருவாயில் உள்ள இன்னொரு டெபுடி டைரக்டர் படேசிங்கை, டைரெக்டர் அனுப்பி வைத்தார். படேசிங், மாலையில் போகும் ரயிலுக்காக, காலையிலே ஸ்டேஷனில் போய் நிற்கும் டைப்பு; எல்லா ரிக்கார்டுகளையும் எடுத்துக் கொண்டார். சென்னைக்குப் போவதுதான் அவரது கடைசி அபிஷியல் யாத்திரை.

ஒரு வாரத்தில், ஒரு ஞாயிற்றுக் கிழமை

சென்ட்ரல் ஸ்டேஷனில் தமிழ்நாடு எக்ஸ்பிரசில் முதல் வகுப்பிலிருந்து இறங்கிய படே சிங்கை, நாலுமுழ வேட்டியும், கிழிந்த சட்டையும் போட்ட நபர் ஒருவன், “நமஸ்கார் படேசிங்ஜி” என்றான்.

கா.6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/83&oldid=1383376" இலிருந்து மீள்விக்கப்பட்டது