பக்கம்:காகித உறவு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

83


கண்ணுச்சாமியின் இருக்கையில் படேசிங் உட்கார்ந்தார். ஏதோ பேசப் போனார் அதற்குள் பண்டாரம் முந்திக் கொண்ட "படேசிங்ஜி. நான்தான் பண்டாரம். உங்களிடம் தனியாய்ப் பேசணும்... மிஸ்டர் கண்ணுச்சாமியை வெளியே போகச் சொல்றீங்களா?" என்றான்.

டெபுடி டைரக்டருக்கு லேசாக விஷயம் புரியத் துவங்கியது. கண்ணுச்சாமியைப் போகும்படி அவர் கண்களால் ஆணையிட்டார். சொந்த அறையில் இருந்தே வெளியேற்றப்பட்ட வெங்கொடுமைச் சாக்காட்டை, நினைத்துக் கண்ணுச்சாமி வெம்பிக் கொண்டு வெளியேறிய போது, பண்டாரம் டெபுடியிடம் முரட்டுத்தனமாகப் பேசினான்.

“படேசிங்ஜி நான் தப்பு பண்ணியது உண்மைதான். ஏன் உங்களை மாதிரி மேலதிகாரிகளும் தப்பு பண்றது மட்டுமில்லாமல், தப்பு செய்கிறவர்களைத்தான் விரும்புகிறீர்கள் என்பதுதான் காரணம். டூர் போனோமே, எந்த ஒரு இடத்திலேயாவது, எந்த ஒரு சின்னச் செலவுக்காவது, எந்த ஒரு சமயத்திலேயாவது நான் கொடுக்கிறேன்னு சொன்னீங்களா? இல்லை. ஏன்? ஊரான் வீட்டுக்காசுன்னா, எனக்கு மட்டுமல்ல. உங்களுக்கும் ஆசை..

'சரி விஷயத்துக்கு வருவோம்.... உங்களுக்கு நான் செலவளிச்சதுக்கு நிறைய ஆதாரம் இருக்கு. நீங்க' அதை' விட்டுடுங்க நான் 'இதை' விட்டுடறேன். நீங்க கண்ணுச்சாமிக்கு எழுதின லெட்டரைப் பிரிச்சது தப்புதான். ஆனால் ஒரு தப்புத்தானே இன்னொரு நல்லதைக் கொண்டு வருது?"

படேசிங் விட்டு விட்டார். பண்டாரம் நேர்மையானவன் என்றும், அவன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்றும், ரிப்போர்ட் கொடுத்து விட்டார். தேவையற்ற பிரச்னைக்கு மூலகாரனமான கிருபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபார்சு செய்தார்.

கிருபாகரன் 'கடவுளே...! இந்தப் பண்டாரத்தை நீதான் அடக்கணும் என்று அலுவலகத்திலேயே சாமி கும்பிட்டான்.

எப்படியோ,'இப்போது பண்டாரம் காட்டில்மழை பெய்கிறது.

மொட்டைப் பெட்டிஷன் போடாமல், முழுக்கையெழுத்துப் போட்ட கிருபாகரன் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கேள்வி.


***

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/85&oldid=1383449" இலிருந்து மீள்விக்கப்பட்டது