பக்கம்:காகித உறவு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

85


"என்னடா... வெனதீர்த்தான். எத தீக்கரதுக்குடா... யோசனையில... இருக்குற..."

"ஒண்ணுமில்லை, மாமா! சும்மாத்தான்!”

“அகத்தின் அழகு... முகத்துல தெரியுன்னு சொல்றது தெரியாதாடா... ஒன்னப் பாத்தா... நீ இங்க இருக்கது மாதிரியும் தெரியல. இருக்க வேண்டியது மாதிரியும் தெரியல..."

"சும்மாத்தா..." "நானும். சும்மாத்தான் கேக்கேன். சும்மாச் சொல்லு"

வினைதீர்த்தான் சிறிது தயங்கினான். சிறிது நாணினான். பிறகு அவரைப் பார்க்காமலே நெற்பயிர்களைப் பார்த்துக் கொண்டு தயங்கித் தயங்கியும், பிறகு தானாகப் பேசாமல் வேறு யாரோ பேசுவது போலவும் பேசினான்.

"ஒண்ணுமில்லே. ஒரு கிறுக்குத்தனமான எண்ணம் வந்தது. இந்த நிலத்தில்... நெல்ல. நானே... விதச்சேன்... நாலைஞ்சி வருஷமா அடமானத்துல இருந்த இந்தப் பூமிய மீட்டி...ராவும் பகலுமா உழச்சேன். இப்போ அதுகூட... எனக்குப் பெரிசாத் தெரியல... இந்த நெல் பயிருங்கள... முளைச்சதுல. இருந்து பார்த்துக்கிட்டு. வரேன் எனக்கு. இதுல. சொந்தப் பிள்ளைய மாதிரி தோணுது. இப்போ பாக்கையில். இதுவள எப்படிக் கஷ்டப்பட்டு வளத்தனோ... அது மாதிரி வளத்து. பத்து வயசில... பறிகொடுத்த. என் மகன் ஞாபகந்தான் வருது. அந்த ஞாபகங்கூட பெரிசாத் தெரியல... நானே வளத்த. இந்த நெல் பயிர. இன்னும் ரெண்டு மாசத்துல. நானே அறுக்கப்போறேன். இத...நினைச்சிப் பார்க்கவே... கஷ்டமா. இருக்கு..."

வீராசாமி சிரித்தார். குனிந்து ஒரு அருகம்புல்லை வேரோடு பிடுங்கி, தலைகீழாக வைத்துப் பற்குத்திக்கொண்டிருந்தவர், பல் குத்துவதை விட்டு விட்டு, மோவாயை துக்கி நெஞ்சை நிமிர்த்திச் சிரித்தார். சுயநினைவுக்கு வந்த வினை தீர்த்தான் சங்கோஜமாக மன்றாடினான்.

"மாமா.நீரு நல்லாயிருப்பியரு. நான் சொன்னதை ஊர்ல சொல்லிடாதேயும்.அப்புறம் நான் தலைகாட்ட முடியாது. எல்லாப் பயலுவளும் என்னைப் பார்த்துச் சிரிப்பாங்க... ஏற்கனவே... ஒரு மாதிரி பார்க்கறானுக."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/87&oldid=1383461" இலிருந்து மீள்விக்கப்பட்டது