பக்கம்:காகித உறவு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

7


கற்பூரத்தை அணைக்கத் தாயார். அக்கம் பக்கத்துக்காரர்கள் அம்மாவிடம் வந்து 'ஒனக்கு பகவான் கிருமையில் ஒரு ஆம்புளப் பிள்ளை பிறக்கணும்', என்று சொல்லும்போதெல்லாம், எனக்கு இனிமே பிள்ளையே வேண்டாம். என் ஒரே மவன் மாடசாமி காலும் கையும் கெதியா இருந்தால் அதுவே போதும், என்று நீ இல்லாத சமயங்களில் அவர்களுக்கு அம்மா பல தடவை பதிலளித்ததைக் காதுபடக் கேட்டிருக்கிறேன். நீ ஈ.எஸ்.எல்.சி முடித்தவுடன் உன்னை உயர்நிலைப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றவள் அவள். நீ எஸ்.எஸ்.எல்.சி. முடித்ததும், நமக்கும் தோளுக்குமேல் ரெண்டு பொட்டப்பிள்ளைங்க இருக்கு. இவனை வேலைக்கு மனுப்போடச் சொல்லலாம் என்று அப்பா சொன்னபோது, நீ மேற்கொண்டு படித்துத் தான் ஆகவேண்டும் என்று அப்பாவை அடிக்காத குறையாகப் பேசி வெற்றி கண்டவள் அம்மா. அப்படின்னா ஒன் வயத்துல பிறந்த ஒருத்தியையாவது படிக்க வைக்கனும் என்று அவர் சொன்னதும், அம்மா அரைகுறையாகச் சம்மதிக்க, நான் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தேன். நான் பி.யூ.சி. படிக்க விரும்பியபோது நீ காலேஜில் கஷ்டமின்றிப் படிப்பதற்காகவும், உன் ஹாஸ்டல் செலவுகளுக்காகவும், என்னைப் படிக்க வைக்கக்கூடாது என்று வாதாடி, காரியத்தைச் சாதித்துக் கொண்டவள் உன் சித்தி. பட்டப் படிப்பை முடித்து, வேலையில் சேர்ந்த கையோடு நீ கல்லூரித் தோழியைக் கல்யாணம் செய்ய நினைத்தபோது, ரெண்டு குமரிங்கள கரையேத்தாம. ஒனக்குக் கல்யாணம் இல்லை" என்று கோபமாகத் திட்டிய அய்யாமீது கோபப்பட்டு, கல்யாணாத்தை மேளதாளத்துடன் நடத்தி வைத்தவள் உன் அம்மாவுக்கு மாற்றாகவும், மாற்றுக் குறையாமலும் வந்த என் அம்மா.

நீ பணம் அனுப்பவில்லை என்பதைவிட, போட்ட கடிதத்திற்குப் பதில் அனுப்பவில்லையே என்ற எண்னத்திலும், வயது வந்த இரண்டு பெண்களை எப்படிக் கரையேற்றுவது என்று புரியாமலும் நாடி நரம்பெல்லாம் வாடி வதங்க எங்களை வாடிய மலர்களாக்கி, மயான பூமியில் அய்யா மறைந்து கொண்டார். நீ ஈமச் சடங்கிற்கு வந்தாய் இருக்கிற நிலத்தை விற்பதற்கான பத்திரத்தில் பெரிய மனது பண்ணிக் கையெழுத்துப் போட்டு, அந்தப் பணத்தை அய்யாவின் ஈமச் சடங்கிற்கும், அம்மாவிற்கு வெள்ளைப் புடவை வாங்குவதற்கும் அனுமதித்த உனக்கு, நாங்கள் நன்றி செலுத்திக் கொண்டோம். நீயும் ஏதோ ஒரு வேகத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/9&oldid=1383440" இலிருந்து மீள்விக்கப்பட்டது