பக்கம்:காகித உறவு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

89


பண்ணைப்பெண், வினைதீர்த்தானுக்குப் பரிதாபப்பட்டுக் கொண்டும், வீராசாமிக்குப் பயந்து கொண்டும், கதவை மூடப் போனபோது, வினைதீர்த்தான் சுயமரியாதையை விட்டுவிட்டே மன்றாடினான்.

"மாமா... ஒம்ம காலுல. வேணுமுன்னாலும் விழுறேன்... இப்டிப் பண்ணாதையும். இன்னும் மூணு தண்ணி பாஞ்சால் போறும்.... மூணுகோட்டை நெல்லு கிடைக்கும். தயவு செஞ்சி வயத்துல... அடிச்சிடாதயும். பயிர் பட்டுப் போயிடும்.... போட்ட பணமுல்லாம்.... நாசமா போயிடும். தயவு செஞ்சு.... தயவு செஞ்சு...."

'ஒனக்கு வளர்த்த பிள்ள... இந்தப் பயிரு... அத ஒன்கையாலே. அறுக்காமல் போறதுக்கு சந்தோஷப்படாம. இப்டி வெக்க மானம் இல்லாம. எதுக்குடா... பிச்ச கேக்குற..."

"கதவ. உடைக்க... அதிக நேரம் ஆவாது மாமா..."

"எங்க... உடடா பார்க்கலாம். இத உடச்சிட்டு நீ ஊர்ல இருந்துடுறத பார்த்துடலாம். நாய்க்குப் பிறந்த நாயே... ஏழா வள்ளி. வீட்டுக்குப் போயி... நம்ம...மருதுவயும். பெருமாளயும். அரிவாளோட வரச் சொல்லுதா. போரழா. ஏல நாய்க்கிப் பிறந்த பயல நீ... ஒரு அப்பனுக்குப் பிறந்தவன்னா. கதவ. உடடா.. பார்க்கலாம்.'

வினைதீர்த்தான், கூனிக்குறுகி நின்றான். அந்த பம்பு அறையை இடித்து, அந்த ஆசாமியைப் புதைக்க, அவனுக்கு அதிக நேரம் ஆகாது. ஆனால் பின் விளைவு. அவனை நம்பியிருக்கும் நாலைந்து பிள்ளைகளின் கதி. வயதுக்கு வரும் பருவத்துக்கு வந்திருக்கும் அவர் மகளின் கதி. அதோடு. அவர் குடும்பம், சிறை போகாத குடும்பம். நாற்பது வயதான அந்த உழவனின் குடும்பம் ஒரு சிவில் குடும்பம்.

என்ன செய்வது என்று புரியாமல், தலையில் கையை வைத்துக் கொண்டு, தன் வயலின் பரப்பில் உட்கார்ந்திருந்த வினைதீர்த்தான், நாளைக்கு வாடிப்போகப் போகிற பயிர்களுக்காக வாடி வதங்கியபடி, ஊர் முகப்புக்குள் வந்தபோது அங்கே சில வரவேற்பாளர்கள் நின்றார்கள். வீராசாமியின் கோபசாமிகள், உறவுக்குக் கை கொடுக்கும் கையாட்கள் வினைதீர்த்தானின் முன்னால் வந்து ஒருவன் வழிமறித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/91&oldid=1383360" இலிருந்து மீள்விக்கப்பட்டது