பக்கம்:காக்கை விடு தூது.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

ஓது புகழ்பெற் றொளிரவே — வேத
நெறிகடந்து, தான்பெற்ற நேரிழையைக் காந்தி
பெறுமகனார்க் கீந்து பிறங்கி — அறுதொழிலை
அறவே மறந்துபோந் தாங்கிலர்கள் தம்மை
இறையி லொழிப்பதற் கேற்ற — முறையுன்னிச்
சட்டங் கடக்கத் தமிழர்களைத் தூண்டியே
கட்டப் படுத்துங் கடுஞ்சிறையில் — விட்டுடனாய்த்
தானுஞ் சிறைபுகுந்து தம்மவரைக் காத்தளிக்கும்
மேன்மைக் குணமே மிகப்படைத்திங் — கானாத
வெள்ளையர்கள் தம்மை விரட்டி யடிப்பதுடன்
எள்ளி யவரீந்த இழிவரசைக் — கொள்ளத்
தாகத வகையாம் தகர்த்தெறிந்து மற்றோர்
புகாத வழியாற் புரக்க — மகாத்துமா
காந்தியெமை ஏவினார் காங்கிரசார் யாமென்னச்
சூழ்ந்த வுரைகள் பலசொல்லி — மாந்தர்களை
மஞ்சளெனும் பேரால் மயக்குறுதீப் பெட்டியினில்
வஞ்சனையால் வாக்களிக்க வைத்ததனால் — விஞ்சியே
தந்திரத்தி னாலே தமிழர்களை ஏய்க்க முதல்
மந்திரியாய்ச் சென்னைமா காணத்தே — வந்தமர்ந்து
சக்ரவர்த்தி யென்று தனையுலகோர் கூறுதலால்
தக்க அரசாய்த் தனைநினைந்து — மிக்க
உழைப்பும் உரனும் உடையதமிழ் மக்கள்
தழைக்க வமருமிடத்தே — பிழைப்பினால்
எல்லைகடத் தப்பெற்ற ராசனெனுந் தம்மவரைக்
கொல்லைப் புறவழியே கொண்டுவந்தார் — வல்லவெழிற்
சீருஞ் சிறப்புமுடைச் செந்தமிழை இந்நாட்டோர்
ஆர்வ முறப்பயிலா தாங்கிலமாம் — பேர்சொல்
பிறர் மொழியைத் தத்தம் பிழைப்புள்ளிக் கற்றே
அறவே தமிழறியாராகி — உறுதமிழிற்
கட்டாய மின்மையாற் கண்ணூற்றுவர்களுள்
எட்டுப்பேர் கூட எழுத்தறிய மட்டிகளாய்த்
தங்க ளுணர்வின்றித் தமிழர் நிலைகுன்றி
எங்கும் அடிமைகளாய் வாழ்நாளில் — இங்குத்
தமிழெனவொன் றில்லையேல் தம்மடியின் கீழே