பக்கம்:காக்கை விடு தூது.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிகளில் ஒன்றாகிய இந்திமொழியின் வளர்ச்சி பிற மாநில மொழிகளின் வளர்ச்சிக்குத் தடையாயிராதவாறு இந்திய நாட்டின் அரசியல் ஆட்சி மொழிபற்றிய சட்டத்தினை ஐயுறவுக்கு இடந்தராதபடி திருத்தியமைத்தல் இந்தியநாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆக்கந்தரும் நற்பணியாகும்.

இந்தியநாடு உரிமைபெறவுழைத்த பெருந்தகையும் நாடு விடுதலைபெறும் நிலையில் இந்திய அரசின் தலைமை ஆளுநராகத் திகழ்ந்தவரும் ஆகிய மூதறிஞர் இராசாசியவர்கள் இந்திமொழியாளரது ஆதிக்கவெறியினைக் கண்டு அஞ்சி இந்திமொழியொன்றே இந்தியாவின் ஆட்சிமொழியாகத் தொடர்ந்து நீடிக்குமானால் இந்தியநாடு பலகண்டங்களாகச் சிதைவுறும் என்பதனையுணர்ந்து இந்திமொழியாதிக்கத்தைத் தமது வாழ்நாளின் இறுதிவரை விடாது கண்டித்துவந்தார். இந்திய நாட்டின் எல்லா மாநிலங்களிலும் பொதுவாகப் பயிலும் பயிற்சி வாய்ந்ததும் இந்நாளில் வளர்ந்துவரும் அறிவியற் கலை நூல்கள் பலவற்றுக்கும் நிலைக்களமாகத் திகழ்வதும் ஆகிய ஆங்கில மொழியினையும் நடுவண் அரசின் ஆட்சிமொழியாக்குதல் தேசிய ஒருமைப்பாட்டுக்குத் துணை புரிவதாகும் என்பது மூதறிஞர் இராசாசி அவர்களின் தெளிவான நம்பிக்கையாகும்.


இந்தியநாடு விடுதலைபெறாதநாளில் சென்னைமாகாண முதலமைச்சராயிருந்து உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கிய இராசாசி அவர்களைக்குறித்துப் பாடப்பெற்றதே காக்கைவிடு தூது என்னும் இப்பனுவலாகும். இந்திமொழியைக் கட்டாயமாகப் பிறமாநிலங்களில் திணித்தல் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைப்பதாகும் என்பதனையே இந்திய நாடு விடுதலை பெற்றபின் மூதறிஞர் இராசாசி அவர்கள் உணர்ந்து வெளியிட்டமை இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும்.

ஆட்சி மொழி இந்தியொன்றே யாயின்இந் நாட்டொருமை
வீழ்ச்சியுறும், ஆங்கிலமும் வேண்டுமென-மாட்சியுறும்
மூதறிஞர் ராசாசி முன்மொழிந்தார் அம்மு றையே
ஏதமிலாச் சட்டமியற் றீர்.

என இந்திய அரசினை வேண்டி நாட்டின் ஒருமைப்பாட்டுணர்வுக்கும் மாநிலமொழிகளின் பாதுகாப்புக்கும் அவற்றின் கலை வளர்ச்சிக்கும் அரண்செய்யும் முறையில் தமிழக அரசும் நடுவண் அரசினை அணுகி ஆவன செய்தல் வேண்டும் எனத்தூண்டும் நோக்குடன் காக்கைவிடுதூது என்னும் இச் சிறுநூல் இரண்டாம் பதிப்பாக இப்பொழுது வெளியிடப் பெறுகின்றது.