உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

பாதை தவறி தி. மு. க. என்றுமே நடக்காது. தன் இலட்சியத்தை விட்டு விலகிச் செல்லாது.

என்னுடைய பணி நான் சட்டசபை வராததால் குந்தகம் ஏற்பட்டுவிடும் என்று எண்ணுவார்களேயானால், அவர்கள் ஏமாற்றம் கொண்டவர்களாவார்கள். என்னை ஒழித்தால் அந்த கேள்விக்குறி ஒழியும் என்று நினைக்கலாம். ஆனால் தி. மு. க. வை ஒழிக்க நினைத்தால் அது யாது. வெற்றி பெரும் வரை ஓயாது போராடுவோம்.

கேள்விக்குறி ஏன் போடுகிறேன் என்றால், என்னுடைய நாடு, என் மொழி, என் இனம், எங்கள் வாழ்க்கை நிலை இவைகட்காக எழும் கழகக் குரலே கேள்விக்குறிதான். இந்த கேள்விக்குறியை 7 பேர் பண்டித நேருவைப் பார்த்து கேட்க மறுப்பார்களா? சட்டசபையிலே 50 பேரும் குரல் கொடுக்காமலிருக்க. முடியுமா?

இந்தக் கேள்விகளை நமது 7 பேரும் பண்டிதரைப் பார்த்துக் கேட்பார்கள்.

நாம் பெற்றிருக்கின்ற வெற்றி மகத்தான வெற்றி. நமது தோழர்கள் சாதாரணமானவர்களையா தோற்கடித்திருக்கிறார்கள்.

டாக்டர் மதுரம், திருச்சியின் செல்லப்பிள்ளை. பெரியாரின் சுவிகாரப்பிள்ளை. அவரை சுருட்டுத் தொழிலாளர்களின் தலைவர் மணி தோற்கடித்திருக்கிறார். உதவி சபாநாயகர் பக்தவச்சலத்தை நமது ராமசாமி தோற்கடித்திருக்கிறார்.

நமது கழகம் விடுதலை இயக்கம். சட்ட சபைப் பணி அந்த இயக்கத்தின் ஒருபகுதி. நாங்கள் இதை மறக்கவில்லை.

காங்கிரஸ் ஆட்சியின் புள்ளி விபரமானால் அதிலுள்ள நன்மை, தீமைகளை திட்டவட்டமாக எடுத்துக் காட்டுவார்கள்.

உணவுப் பிரச்சினையா ? மக்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் அங்கே பேசுவார்கள்.