12
நிதிநிலையா ? வடக்கின் வாழ்வும், தெற்கின் நிலையையும் எண்ணிப்பார்த்துப் பேசுவார்கள்.
நிர்வாக ஊழலா, மக்களின் பணத்தை மமதையால் செலவு செய்து துர்வினியோகம் செய்யும் ஊழல்களைப் பேசுவார்கள்.
எதிர்கட்சி என்றால் சட்ட சபையிலேயே உட்கார்ந்ததும் திராவிடநாடு திராவிடருக்கே என்று கோஷமிட்டு விட்டுத் திரும்பமாட்டார்கள்.
நமது கழகம் ஒரு விடுதலை இயக்கம்தான். அதே நேரத்தில் சட்ட மன்றத்திற்குள் செல்லும்போதும் வெளியே வரும்போதும் நமது தோழர்கள் 'திராவிட நாடு திராவிடருக்கே' என்ற முழக்கத்தோடு மட்டும் திரும்பிவிடமாட்டார்கள்—பொறுப்புள்ள எதிர்க் கட்சியனராகத்தான் பணியாற்றுவார்கள்; ஆட்சியின் நிர்வாக ஊழல்களை அம்பலத்துக்குக் கொண்டுவருவார்கள்; நீர்ப்பாசன திட்டங்களை வற்புறுத்துவார்கள்; விவசாயப் பிரச்சினைகளை விவாதிப்பார்கள்; மக்களுக்குத் தேவையான எல்லாப் பிரச்சினைகளையும் எடுத்துப் பேசுவார்கள்; 'இது ஒரு விடுதலை இயக்கம் தானே' எனக் கருதி மற்றப் பிரச்னைகளை யெல்லாம் பேசாமல் விட்டுவிடமாட்டார்கள்.
இப்படிப்பட்ட வெற்றிவீரர்களைப் பெற்ற நம்மைக் கண்டு பத்திரிகைகள் புத்தி சொல்ல ஆரம்பிக்கின்றன.
நம்மை இதுவரை மதியாத பத்திரிகைகள் எல்லாம் நமது வெற்றியைக் கண்டதும் புத்தியாவது கூறவந்தார்களே என்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
புத்தியை யாருக்கு சொல்லுவது? ஆளும் கட்சிக்கா ? ஆளும் கட்சியை எதிர்த்து வெற்றிபெற்ற நமக்கா ?
வட நாட்டிலே காங்கிரசுக் கட்சியை சுதந்திரா தோற்கடித்து பலமிழக்கச் செய்துவிட்டது.
காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலை மக்களிடையே செல்வாக்கற்றுவிட்டது. அவர்களுக்கு அல்லவா பத்திரிகைகள் புத்தி சொல்ல வேண்டும்.