13
'இந்து' உலகப் பேரறிவாளர்களால் மதிக்கப்படுகின்ற பத்திரிகை, அது அரசியல் பிரச்சினைகளை ஆராயும்போது பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். எனக்கு ஆதரவு காட்டவேண்டாம். அன்பு காட்டவும் வேண்டாம்.
சேலை கட்டி வந்தாள் சென்னியப்பன் என்று சொன்னால் பொருள் சரிதானா ? சேலை கட்டிய செந்தாமரை வந்தாள் என்றாள் அது சரி. சேலை கட்டி வந்தாள் சென்னியப்பன் என்றால் எப்படி அது. சரியாகும்.
சென்ற தேர்தலிலே வெற்றி பெற்ற நாங்கள் எங்கள் தொகுதிகளை சரிவர கவனிக்கவில்லை சட்ட சபையிலேயே சரிவர பணியாற்றவில்லை இருந்தாலும் அவர்களைக் காணோமே; என்று எழுதியிருக்கிறது. இந்து. இது சேலைகட்டிவந்தாள் சென்னியப்பன் என்பதைப் போல் இல்லையா ?
சட்ட சபையிலே நான் இல்லாததால் என்ன நடக்குமோ, என்ற எண்ணத்துடன் இந்து எழுதியிருக்கிறது.
திராவிடநாடு பிரச்சினையை விட்டுவிடு என்றும் கூறுகிறது. திராவிடநாடு திராவிடருக்கே என்ற இலட்சியத்தை என்று கூறத் தொடங்கினோமோ அன்றிலிருந்து இன்றுவரை ஓயாது ஒழியாது கூறிக் கொண்டே இருக்கிறோம். இனியும் கூறிக்கொண்டே இருப்போம். இத்தகைய கொள்கை உரம் கொண்டவர்களைப் பார்த்து இந்து, திராவிடநாட்டை விட்டு விடு என்று புத்தி கூறுவதானது எங்கள் மீதுள்ள அக்கறையாலா? அல்லது அவர்களுக்குள்ள ஆத்திரத்தாலா ?
அரசியல் பிரச்சினைகளை அணுகும்போது அறிவோடும் பொறுப்போடும் ஆராய்ந்து அணுக வேண்டும். முடியவில்லை என்றால் லண்டனிலே ஏன் கிளை அலுவலகம்? மவுண்ரோடோடு நிறுத்திக் கொள்ளலாம்; எழுதும்போது பொறுமை இருக்க வேண்டாமா?