8
சென்றால்தான் காரியம் நடைபெறும் என்கின்ற நிலைமை இல்லை. அந்த வகையிலே வெற்றி பெற்றுச் சென்றிருக்கிற தோழர்கள் திறமையாக நடத்திக் காட்டுவார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் அங்கே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பணியாற்றுவதோடு விடுதலை இயக்கமாகவும் தொண்டாற்றி வரும்.
ஆகவே இந்துப் பத்திரிகை எழுதியுள்ளபடி கழகம் பொறுப்புள்ள எதிர்க் கட்சியாக இருப்பதோடு திராவிடநாடு கொள்கைக்காக போராடுவதிலும் ஒரு சிறிதும் பின் வாங்காது.
காஞ்சித் தொகுதியிலே என்னையும், என்னைச் சேர்ந்த மற்ற சட்டமன்ற உறுப்பினர்களையும் தோற்கடிக்க காங்கிரசுக்காரர்கள் திட்டமிட்டே வேலை செய்தார்கள்.
காஞ்சித்தொகுதியில் நான் தோற்றுப்போவேன் என்பது எனக்கு முன்பே தெரியும். இதை தம்பி கருணாநிதியிடம் "தம்பி, நீ கொடுக்கும் 'குளுகோஸ் இன்ஜெக்ஷன் (ஊசி)' ஆளைப் பிழைக்க வைக்காது” என்று கூறி இருக்கிறேன்.
எங்கள் தொகுதிகளை மட்டுமே திட்டமிட்டு வேலை செய்தார்கள் மற்றத் தொகுதிகளை துச்சமாக மதித்தார்கள். கோட்டைவிட்டார்கள்.
எங்களை இந்தத் தேர்தலிலே தோற்கடித்ததைப் போல் அடுத்த தேர்தலிலே இந்த 50 பேரையும் தோற்கடிக்க முயன்றால், அடுத்த இடத்திலே இருந்து 70 பேர் எழுவார்கள்.
ஓட்டை விழுந்த பானையிலே கையை வைத்து மூடினால்; வேறு இடத்திலே தண்ணீர் ஒழுகச் செய்யும். காங்கிரஸ் ஓட்டைப் பானையாகிவிட்டது.
ஆளைத் தேள் கொட்டினால் ஆள் துடிக்கிறான். அதனாலே ஆளைவிட தேள்தான் உயர்ந்தது என்று எண்ணுவது பைத்தியக்காரத்தனமாகும்.