9
தி. மு. க. வெற்றி களிப்பிலே மட்டும் வளர்ந்ததல்ல. வேதனைத் துயரிலேயும் வளர்ந்தது. நமக்குள்ள வேறு பெயரே கண்ணீர்த் துளிகளே தவிர பன்னீர்த் துளிகளல்ல
தேர்தலிலே நம்மில் பலர் தோற்றுவிட்டோம் என்பதற்காக வேதனைப்பட வேண்டியதில்லை. நாம் பெற்ற வெற்றிப் பட்டியலைக் கண்டு மகிழவேண்டும்.
களத்திலே போராடும் வீரன் வீழ்த்தப்பட்ட பிணங்களைக் கண்டு வேகமாக முன்னேற வேண்டும். சபல உள்ளத்திற்கு இடம் தருபவன் வீரனாக மாட்டான்.
வீரன் ஒருவன் இறந்துவிட்டதைக் கண்டு, மக்கள் அழுதார்கள், நாடே அழுதது. ஆனால் அவனைப் பெற்ற தாய்மட்டும் அழவில்லை. கல் மனம் கொண்டவளா தாய், என்று பார்ப்பவர்கள் கேட்பார்கள்? என் மகன் கடமை வீரனாக இறந்தான், நான் அதற்காக அழுதால் அவனுக்கு கோழை என்ற பெயர் வந்து விடும். அதனால் நான் அழவில்லை என்றாளாம். அந்த தாய் மனப்பான்மை நமக்கு வேண்டும்.
நான்கு மாதங்களிலே முடியாத ஓய்வை நான்கு நாட்களாக மைசூர் மாநிலத்தே பெற்று வந்திருக்கிறேன். இயற்கை காட்சிகளை ரசிப்பதும், சிற்பங்களின் திறமை கண்டு சிந்தைக்கு மகிழ்ச்சி தருவதும், உண்பதும் உறங்குவதுமாக இருந்தேன்.
நாம் தோல்வியடைந்ததைப் பற்றி இனி யாரும் பேச வேண்டாம்.
வெற்றி வீரன் என்றால், வீழ்ந்துவிட்ட பிணத்தைக் கண்டு முன்னேற வேண்டும். அவன் வீரன். நமது வெற்றி என்றும் நம்மிடையே நிற்கும். அதற்கு இந்தத் தோல்வி உரமாக இருக்கட்டும். இனியும் வேதனைப்படாதீர்கள்.
தேர்தலிலே நான் ஒருவன் மட்டுமா தோற்றேன். என்னுடன் 11 பேரும் தோற்றுவிட்டார்கள். அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை.