பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IX


சுவாமிகளின் நாலாயிரம் திவ்வியார்த்த தீவிகை ஆகிய இரண்டும் துணையாக அமைந்தன. வைகுண்ட வாசியாகிய நம்பிள்ளையும் பூவுலக (காஞ்சி)வாசியாகிய பி.ப. அண்ணா சுவாமிகளும் ஏகலைவனுக்கு துரோணர் மானசீகமாக ஆசி கூறியது போல எனக்கு ஆசி கூறி உதவி வந்தனர்.

அக்காலத்தில் அண்ணா சுவாமி அவர்களை நேரில் பார்த்ததும் இல்லை; அவர்தம் திவ்வியார்த்த தீபிகையைக் கேள்வியுற்றதும் இல்லை.2 அக்காலத்தில் திருப்பதியில் பல்கலைக்கழகக் கீழ்த்திசை ஆராய்ச்சித் துறையில் பணியாற்றி வந்த வடமொழிப் புலவர் திரு. சீநிவாசவரதன் (அண்ணா சாமியின் அணுக்கத் தொண்டர்) புருஷகாரமாக அமைந்து திவ்வியார்த்த தீபிகையின் அனைத்துப் பகுதிகளையும் என்னிடம் சேர்ப்பித்தார். (அதன் விலை ரூ.400/அவரிடம் தந்ததாக நினைவு).

தீபிகையின் பக்கங்கள் 'பிழை மலிந்த சருக்கங் களாகக்’ காட்சியளித்தன. வடசொற்களின் பிழையை அறிந்து கொள்ளாமல் படிக்க இயலாது. அப்போது மயிலை விவேகாநந்தர் கல்லூரியில் பணியாற்றிய திரு. வேங்கடராகவாசாரியர் என்பவர் திருப்பதியில் ஏற்படுத்தப் பெற்றுள்ள வடமொழி ஆய்வு நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி வந்தார். நான் ஆறு ஆண்டுகள் குடும்பமின்றி மாணியாக வாழ்ந்தது போல் அவரும் குடும்பமின்றி மாணியாகவே வாழ்ந்து வந்தார். அவர் கோவிந்தராஜ சுவாமி சந்நிதித் தெருவில் ஓர் இல்லத்தில் தங்கியிருந்தார். நான் தங்கியிருந்த அறைக்கும் அவர் இருந்த இல்லத்திற்கும் குறுக்கு வழி இருந்தது. மாலை நேரங்களில் சுமார் 8 மணி வரையில் அவர் இல்லத்தில் தான் இருப்பேன். தமிழை நன்கு அறிந்தவராதலால் என்னிடம் எழும் அனைத்து ஐயங்களையும் போக்குவார்;


2திருவாய்மொழி பற்றிய வியாக்கியானங்களைப் பார்த்ததுண்டு. மணி பிரவாள நடையிலமைந்த அவற்றைப் படித்தும் புரிந்து கொள்ளும் ஆற்றலும் இல்லை. நெறிகாட்டக் கூடிய அறிஞர்களும் இல்லை.