பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தீபிகையிலுள்ள வடமொழிப் பதங்களை பிழை நீக்கி விளக்குவார்.

உவமை சொல்லும் இடங்களிலும் பிற சிக்கலான இடங்களிலும் அவ்வப்போது எழும் ஐயங்களை விளக்கு மாறு அண்ணா சாமிக்கு எழுதுவேன். மறு தபாலில் அஞ்ச லட்டையில் விளக்கம் வந்து விடும். இப்படி வந்தவை நூற்றுக்கு மேலிருக்கும். அவற்றைப் பாதுகாத்து வைக்க வில்லை.

அண்ணாசாமியின் சதாபிகத்தின்போது அவருக்கு 'மலை நாட்டுத் திருப்பதிகள்' நூலை அன்புப் படைய லாக்கி ஆசி பெற்ற பிறகு அடிக்கடிப் பார்க்கும் பேறு இருந்து வந்தது. ஒரு சமயம் அவரிடம் "டாக்டர். உ.வே. சாமிநாத அய்யருக்கு கி.வா. ஜகந்நாதன் துணையாக அமைந்ததால் அவருடைய நூல்களில் பிழையே மருந்துக்குக் கூடக் கிடைப்பதில்லை. திவ்வியார்த்த தீபிகையின் பக்கங்கள் பிழைமலிந்த சருக்கங்களாகக் காணப்பெறுகின்றன. தாங்கள் ஒரு குத்து விளக்கு போன்ற ஒருவரைக் கூட சீடராகக் கொள்ளவில்லையே" என்று வருத்தத்துடன் கூறினேன்.

கோவிலுக்குப் பிரசாதத்துக்காக சில வைணவ இளைஞர்கள் வருவார்கள். "வாருங்கள் ஏதாவது சொல்லுகிறேன் தெரிந்து கொள்ளுங்கள்" என்று சொல்லலாம் என்று திரும்புவதற்கு முன்னர் 'படிக்க விரும்பாதவர்கள்' மாயமாய் மறைந்து விடுவார்கள். நீங்கள் விபூதி அணிந்து கொண்டு ஆர்வமாய் வைணவ தத்துவங்களைத் தெரிந்து கொள்ளத் துடிக்கின்றீர்கள். நீங்கள்தான் என் பிரதம சீடர்" என்று சொன்னார்கள். எனக்கு ஒரே அதிர்ச்சி, உரோமங்கள் சிலிர்த்தன. கண்கள் ஆனந்தக் கண்ணீர் நிறைந்த குளங்களாயின. இந்த நினைவுகளுடனும் உணர்வுகளுடனும் இந்த நூல் உருவாயிற்று.