பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள் தத்துவம் 155 காதல் சுவையின் தொடர்பு சிறிதுமின்றியே பக்திச் சுவையின் அடிப்படையாகவே பாசுரங்கள் அருளிச் செய்தல் கூடும். அங்ங்ணமிருக்க, காதல் சுவையையும் கலந்து பாசுரங்கள் அருளிச் செய்யப் பெற்றிருப்பதற்குக் காரணம் என்ன? உடல் நலத்திற்குக் காரணமான வேப்பிலை உருண்டையை உட்கொள்ளவேண்டியவர்கட்கு வெல்லத்தை வெளியிற் பூசிக்கொடுத்து உண்பிப்பது போலவும், கொயினா மாத்திரைகட்குச் சருக்கரைப் பாகுபூசி இனிப்புச் சுவையை உண்டாக்கித் தின்பிப்பது போலவும் சிற்றின்பம் கூறும் வகையில் பேரின்பத்தை நிலை நாட்டுகின்றனர் என்று பெரியோர்கள் பணிப்பர். இது கடையாய காமத்தினை யுடையவர்கட்குக் காட்டப்பெறும் உக்தி முறையாக 'இறையனார் களவியலிலும் கூறப்பெற்றுள்ளமையை ஈண்டு ஒப்பு நோக்கி உணர்தல் தகும். ஆழ்வார்களின் முறுகிய பக்தி நிலையை உணர்த்துவதற்கேற்ற ஓர் இலக்கியமரபே இஃது என்று கொள்ளினும் இழுக்கில்லை. அகப்பொருள் பாசுரங்கள் : எம்பெருமானை அநுபவித்தல் பலவகைப் பட்டிருக்கும். அவனுடைய திருநாமங்களைச் சொல்லியநுபவித்தல், வடிவழகை வருணித்து அநுபவித்தல், திருக்கல்யாண குணங்களைச் சொல்லியநுபவித்தல், அவன் உகந்தருளின திவ்விய தேசங்களின் வளங்களைப் பேசியநுபவித்தல் என்பவை பகவதநுபவம். இவற்றுள் மிக அருமையான, அற்புதமான மற்றொரு வகையும் உண்டு. அஃதாவது ஆழ்வார்கள் தாமான தன்மையை விட்டுப் பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக் கொண்டு வேற்று வாயால் பேசி அநுபவித்தல். இம்முறையை நாயக - நாயகி பாவனை என்று வழங்குவார்கள். இது நவவித சம்பந்தங்களில் நான்காவது சம்பந்தமாக அமையும்; அதாவது உகாரத்தினால் பெறப்படுவது இந்த உறவே 4. இறை. கள - நூற்பா - 2. இன்உரை காண்க.