பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பும் வளர்ப்பும்

5



உலகில் பரவுவதற்கும் நிலை பெறுவதற்கும் அப் பெருமகனார் நியமித்தருளிய சிம்மாசனாதிபதிகள் எழுபத்து நால்வர். இந்த வைணவ சீலர்களில் ஒருவர் முடும்பை நம்பி என்பார். இவர்தம் வழித் தோன்றலும் பிள்ளை உலக ஆசிரியரின்3 சிறிய தந்தையாரின் திருப் பேரனாருமாகிய அஸ்திகிரி அண்ணா என்ற பெரியார். இப் பெரியார்தாம் பாண்டவ கெளரவ வம்சத்தினருக்கு அமைந்த பிதாமகன் பீஷ்மர் (வீடுமர்) போல் நம் சுவாமிகளின் மூல புருடர். இவர் சமய தத்துவங்களைப் பிற சமயத்தாருக்கு விளக்கும் பொருட்டு வாதம் புரிவதில் வல்லவரானபடியால் வேதாந்த தேசிகர் என்ற வைணவப் பெருமகனாரால் ‘பிரதிவாதி பயங்கரம்4' என்ற மகுடம் சூட்டப் பெற்றவர். பிற்காலத்தில் வைணவ சித்தாந்தத்தை நிலைநாட்டும் பொருட்டு மணவாள மாமுனிகள்5 என்ற வைணவ ஆசாரியப் பெருமகனாரால் நியமிக்கப்பெற்ற அஷ்டதிக்கெஜ ஆசாரியர்களுள் ஒருவராக நியமிக்கப்பெற்றவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணன் சுவாமிகள்.

பெற்றோர்கள் : நம் சுவாமியின் திருத்தந்தையார் அண்ணா.அரங்காசாரியார் என்று வழங்கப்பெறும் அரங்க நாதாரியார்6. திருத்தாயார் அலர்மேல்மங்கை அம்மை7. இவர்

 

3. இவர் திருவரங்கம் வடக்குத் திருவீதிப்பிள்ளையவர்களின் திருக்குமாரர். இவர் வைணவ சமயத்தின் அடிப்படை நூல்களாக முமுட்சுபடி முதலான18 இரகசியங்களை வெளியிட்டருளிய மகான்.

4. இப்பட்டப் பெயர் அவர்தம் குலத் தோன்றல்கள் அனைவருக்கும் இன்றளவும் சேர்க்கப்பெற்று வழங்கி வருகின்றது.

5. இப்பெருமகனார் வைணவ இரகசியங்கள் பலவற்றிற்கு விளக்கவுரை அருளியவர்.

6. பிரதிவாத பயங்கரம் அண்ணன் திருவம்சத்தினர்.

7. திரு சஷ்டி வரதாசாரியார் (பிற்காலத்தில் காஞ்சி அழகிய மணவாள சீயராக எழுந்தருளியிருந்த மகான்) அவர்களின் திருமகளார்.