பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

காஞ்சி.பி.ப. அண்ணா சுவாமிகள்



தம் ஒரே ஆண் மகவாகப் பிறந்தவர் நம் சுவாமி. பிறந்த ஆண்டு 1891. சுவாமிகளின் உடன் பிறப்பு மூன்று பெண் பிள்ளைகள்.

பெற்ற கல்வி : தந்தையார் பரம வைதிகராதலால் நம் சுவாமிக்கு இளமையில் உபநயனம் முதலியவை உரிய காலங்களில் செய்விக்கப் பெற்றன. தொடக்கத்தில் தந்தையாரே மகனுக்கு ஆசிரியராக அமைந்தார். சிறிய வயதிலேயே சப்தமஞ்சி, இராமாயண சங்கிரகம் (சுருக்கம்) முதலிய நூல்களின் பாடங்களைப் பயிற்றுவித்தார். காஞ்சிபுரம் சந்நிதித் தெருவில் உள்ள வானமாமலை மடத்தில் உள்ள சமஸ்கிருதப் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிய தந்தையார் மைந்தனுக்கு இப்பாடசாலையில் தான் தொடக்கக் காலக் கல்வி நடைபெறச் செய்தார். யாது காரணத்தாலோ சுவாமியின் 12-வது அகவையில் அப்பாடசாலை நடைபெறாமல் நின்று விட்டது. பின்னர் தேவப் பெருமாள் சந்நிதி வசந்த மண்டபத்தில் நடைபெற்று வந்த ‘சடகோபன் நிலையம்’ என்கின்ற சமஸ்கிருதம் பாடசாலையிலும் பயில நேரிட்டது. மேலும் காஞ்சிபுரம் அண்ணா சந்நிதியில் ஜகத்குரு ஸ்ரீமத் காதி அனந்தாசாரியர் சுவாமியால் நிறுவப்பெற்ற ‘வேதாந்த வைஜயந்தி’ என்ற பாடசாலையில் தந்தையார் தலைமையாசிரியராகப் பணியாற்றியபோது அங்கும் நம் சுவாமி பயில நேரிட்டது. ஆனால் ஏழு எட்டு திங்களுக்குள் தந்தையார் நோய் வாய்ப்பட்டு நடமாட முடியாத நிலையில் தம் இல்லத்திலேயே வகுப்புகள் நடத்த நேரிட்டது. இதனால் எல்லா வகுப்புப் பாடங்களையும் ஒரே சமயத்தில் கற்கும் வாய்ப்பு நம் சுவாமிக்குக் கிடைத்தது. இந்த வாய்ப்பினால் சுவாமியின் கல்வியறிவு விரைவாக வளர்ந்தது.

ஆங்கிலக் கல்வி : தந்தையாருக்கு சிகிச்சை செய்ய வந்த மருத்துவர் தந்தையார் வேண்டுகோளின்படி நம் சுவாமிக்கு ஆங்கிலம் கற்பிக்க அதனால் சுவாமிக்கு