பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்க் கலையின் தோற்றம்

97


 மைத்துனர் உக்கல் வடிவேலு அவர்களைப் பதிப்பாளராக்கி நான் ஆசிரியராக இருந்துகொண்டு, தமிழ்க் கலை' என்ற திங்கள் இதழைத் தொடங்கி நடத்தி வந்தேன். அக்காலத்தில் அதிக இதழ்கள் இல்லாமையும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் வலுவும் சேர்ந்து என் இதழுக்கு ஏற்றம் தந்தன. இத் தமிழ்க்கலை இதழினைப் பற்றிப் பேரறிஞர் அண்ணா அவர்கள், "நாட்டில் நம் கொள்கையைப் பரப்ப நல்ல இதழ்கள் இல்லை’ என்று நைந்து கடிதம் எழுதிய கலைஞர் T. K. சண்முகம் அவர்களுக்குப் பதில் எழுதியவகையில் குறிப்பிட்டார். (அது பற்றி T. K. சண்முகம் அவர்தம் மணி விழா மலரைப் பார்த்த பிறகே நான் அறிந்து கொண்டேன்.)

நான்கைந்து திங்கள் நடத்திய பிறகுதான் பிற அச்சகங்களில் அச்சிடுவதால் உண்டான சில தவிர்க்க முடியாத தொல்லைகள் புலனாயின. எனவே நமக்கெனவே ஓர் அச்சகம் நிறுவ நினைத்தேன். அதே வேளையில்தான் காளப்பரும் இராசகோபாலரும் நினைவில் வந்தனர். அவர்களோடு என் மைத்துனரையும் இணைத்துக்கொண்டேன். வேறு ஒரு காங்கிரஸ் பிரமுகர் தாமே வலிய வந்து அச்சகத்தில் பங்கு பெறுவதாகக் கேட்டார். மறுத்தால் தொல்லை விளையுமே என்று அஞ்சிச் சேர்த்துக்கொண்டோம். அவரால் சில சமயங்களில் தொல்லை அடைவோம். நல்லவேளை "தமிழ்க் கலையைத் தனியாகவே வைத்திருந்தமையால், அவரால் அதைப்பற்றி ஒன்றும் கேட்க முடியவில்லை. சில இதழ்களில் இந்தி எதிர்ப்பின் வலு நன்கு காட்டப்பெற்றிருக்கும். அது கண்டு அவர் அலறுவார். அதற்கு நான் என் செயக் கூடும்? சில ஆண்டுகள் கழியுமுன்பே அவரே விலகிக் கொண்டார். எங்கள் எல்லோரைக் காட்டிலும் அவர் சற்றே செல்வத்தில் உயர்ந்தவராக இருந்தமையால் நாங்களும் தூரவிலகுவதே நல்லதென்ற முடிவில் அவரை அனுப்பி வைத்தோம். அதனாலேயே இன்றளவும் அவர் எங்கள் நண்பராகவே இருந்து வருகிறார், 7