பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்க் கலையின் தோற்றம்

101


 வேண்டாம் என்பது என் எண்ணம், இந்த எண்ணத்தை ஊட்டியவர் என் அன்னையும் பாட்டனரும் ஆவர். நாம் கோயிலுக்குக் கொடுக்கப் பிறந்தோமே ஒழிய எடுக்கப் பிறக்கவில்லை என்பது அவர்கள் வாதம். (கோயில் பொருளைப் பாதுகாப்பது பற்றி என் பாட்டனார் கொண்ட கொள்கையினை என் இளமையின் நினைவுகள் என்ற நூலில் முன்னமே எழுதியுள்ளேன்.) அதுமட்டுமின்றி அன்றுதொட்டு இன்றுவரை எங்களுர்க் கோயில் அறக்காப்பாளராக இருந்தவர்கள் நிலையில் தாழ்ந்தார்களே அன்றி உயரவும் இல்லை-முன் உற்ற வாழ்வையும் பெற வில்லை. இவற்றை யெல்லாம் விளக்கியே எனது மைத்துனர் ஏற்ற பதவியை உடன் ராஜினமா செய்யச் சொன்னேன். ஆனால் அவரோ அவர் தந்தையோ மற்றவரோ அதைப் பொருட்படுத்தவில்லை. அதுபோது எனக்கு மங்கையர்க்கரசியும் மெய்கண்டானும் பிள்ளைகள். மெய்கண்டான் மூன்று திங்கட் குழந்தை. எனினும் நான் அவர்கள் தொடர்பையே விட்டுவிட்டேன். எனது மனைவி சந்திராவும் என் சொல்லை மாருது தாய் வீடு செல்லவில்லை. நாங்கள் தனியாக இருந்து பெற்ற அல்லல் பல. எனினும் கொள்கை அளவில் நிலைத்தே நின்றேன். இரண்டொரு திங்களில் எனது மாமனார் மற்றவருடன் வந்து சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். எனினும் அவர் கோயில் பணியை விடவில்லை. நானும் அதற்குமுன் பலமுறை அக்கோயிலுக்குச் சென்றேன் என்றாலும் அன்று தொட்டு இன்றுவரை அக்கோயிலுக்குச் செல்லவில்லை. எனது மைத்துனர் வாழ்வும் அதனால் ஒரளவு சரிந்ததேயன்றி நிமிர்ந்தது என்று சொல்ல முடியாது. என்றாலும் அன்று நான் சொல்லிய அனைத்தும் அவர்கட்கு வேம்பாகக் கசந்தது. காளப்பர் போன்றாரும் என்னோடு மாறுபட அதுவும் காரணமாயது. இவ்வாறு பல நிகழ்ச்சிகளுக்கு இடையில் காஞ்சியில் எனது வாழ்க்கை மெள்ளக் கழிந்து கொண்டு வந்தது. இதற்கிடையில் முன்னவள் வந்து சென்ற நாடகத்தையும் இங்கே காட்ட வேண்டும் என எண்ணுகிறேன்.