பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

காஞ்சி வாழ்க்கை



அவன் குண்டுவரும் என்று பயந்துதான், அந்த ஆண்டு சென்னையில் எழுத இருந்த மாணவர்களை, அவர்தம் தேர்வுகளை வெளியூர்களில் எழுதப் பல்கலைக் கழகத்தார் ஏற்பாடு செய்துவிட்டனர். அந்த இடமாற்றம் நாட்டுக்குழப்பம் முதலியன என்னை முதலில் தேர்வுபெறாமல் செய்துவிட்டது. பிறகு செப்டம்பரில் வேலூரில் சென்று தேர்வு எழுதி வெற்றி பெற்றேன்.

பிறகு "பீ. ஓ. எல் படிக்க விரும்பினேன். அதற்குரிய ஆங்கிலப் பாடங்களை மினர்வா கல்லூரியில் பயின்றேன். அப்போதுதான் அறிஞர் திரு. பரசுராமன் எனக்கு அறிமுக மானார்கள். அவர்தம் பன்மொழிப் புலமையையும் ஆழ்ந்த அறிவையும் தெளிந்த சிந்தையையும் விளக்கப் பேச்சையும் எண்ணி எண்ணி வியந்தேன். அவர்களும் நான் ஆசிரியனாக இருந்து பயில வந்தமையின் எனக்குத் தனிச்சலுகை தந்து காத்தனர். அவருடன் இருந்த சர்வோத்தமராவ் என்பாருடைய ஆங்கில வகுப்பு மிகச்சிறந்தது. அவர்களிடம் பயின்ற நான் தேர்வில் வெற்றிபெற்றேன் என்று சொல்ல வேண்டுவதில்லை. மூன்றாவது பிரிவையும் தனிமையாகப் பயின்றேன். இதற்கிடையில் காஞ்சி ஆண்டர்சன் பள்ளியில் தலைமை ஆசிரியர் மாறி வேறு ஒருவர் அப்பதவியைப் பெற்றார். தமிழாசிரியர் ஒருவர்-எனக்கு ஆசிரியராக இருந்தவர்-என் கீழே பணிசெய்ய வந்தார். எனவே அங்கே தொடர்ந்து பணியாற்றுவதில் சில சிக்கல்கள் முளைத்தன. போர் தொடர்ந்து நடைபெற்று வந்தது. நானும் என் பணிகளுக்கிடையில் போர் அமைதிப் பணிக்கும் ஆவன செய்துகொண்டே வந்தேன்.