பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



10. சென்னை வாழ்வின் தொடக்கம்

சென்னை வாழ்க்கை இன்பமான நிலையிலேயே தொடங்கப்பெற்றது. சென்னை நகரம் எனக்குப் புதியதன்றே. எத்தனையோ முறை நாட்கணக்கிலும் மாதக்கணக்கிலும் கூட நான் சென்னையில் தங்கியுள்ளேன். என் மேல் படிப்புக்காக நான் எழும்பூரில் சில திங்கள் தங்கியதுண்டு. அக்காலத்திலெல்லாம் பழகிய பல பெரியவர்கள் என் சென்னை வாழ்க்கைக்கு உறுதுணையாக அமைந்தனர். எனினும் 1944, போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். 1942ல் சென்னையே 'அல்லோலகல்லோலப்' பட்டுக் காலி செய்யப் பெற்றிருந்த நிலைமாறி, இடம் கிடைக்காத ஒரு சூழல் உருவாகியிருந்தது. எனவே நான் சென்னையில் கால் வைத்த போது இட நெருக்கடி உண்டாகியிருந்தது. எனினும் இதை நான் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து (1969ல்) எழுதும் போது விரிவடைந்த சென்னை நகரத்தில் உள்ள நெருக்கடி அப்போது இருந்ததில்லை.

சென்னையில் மிகப் பழைய பச்சையப்பர் கல்லூரியில் தமிழாசிரியர் பதவி பற்றிய விண்ணப்பம் குறித்த விளம்பரம் வந்தது. நானும் ஒரு விண்ணப்பம் அனுப்பினேன். காஞ்சியின் பள்ளியை விட்டபோது இப்படி ஒரு வாய்ப்பு வரும் என்று நான் எண்ணவில்லை. எனது கிராமத்தில் சென்று பயிர்த் தொழிலை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமே என் உள்ளத்தில் மேலோங்கி இருந்தது. 'சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்' அதனால் உழன்றும் உழவே தலை’ என்ற எண்ணமே என் உள்ளத்தில் சுழன்றுகொண்டிருந்தது. *உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்றபடி அந்த வாழ்வையே நான் விரும்பினேன். அதனால் எங்கள் நிலங்களைச் செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டேன். பல அண்டை