பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடிவுரை

143



களாகக் குறிக்கப் பெற்றுள்ள சிலர் இன்று மறைந்துவிட்டனர் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர் என் முன்னவள் திரு. காளப்பர், ஆத்மானந்த அடிகளார் போன்றவர்கள். எனவே நூலில் அவர்கள் வாழ்ந்ததாகக் காட்டும் நிகழ்ச்சிகள் பல அவர்தம் கடந்தகால நிகழ்ச்சிகளாக அமைந்துவிட்டன என்பதை இங்கே குறிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த நூலின் வழியே என் வாழ்க்கையின் ஒரு பகுதியைக் காட்டினேன் என்றாலும், இதனால் யாருக்கும் பயனோ பிறவோ விளையும் என்று நான் கருதவில்லை. பல பேரறிஞர் தம் வாழ்க்கை வரலாறுகள் வையத்தில் உலவுகின்றன. தமிழகத்திலும் திரு. வி. க. போன்ற பேரறிஞர்கள் எழுதிய வாழ்க்கை வரலாறுகள் மக்கள் வாழ்வின் வழிகாட்டிகளாய் கலங்கரை விளக்கங்களாக நின்று நன்கு நிலவும் என்பது உண்மை. அத்தகைய ஒன்று இது அன்று. ஏதோ நான் என் வாழ்வில் பெற்ற அனுபவங்களை எழுதவேண்டும் என்ற ஆசை தூண்டிய காரணத்தாலே இதை எழுதினேன். என் "இளமையின் நினைவுகளை"க் கண்டசில அன்பர்கள்-காஞ்சியில் வாழ்ந்த சில நல்லவர்கள் - அவர்களொடு தொடர்புடைய 'காஞ்சி வாழ்க்கை'யைப் பற்றியும் என்னை எழுதத் தூண்டிய காரணமும் ஒன்றாக அமைந்தது. ஆயினும் அவ்வாறு எழுதப்பெற்ற இந்த எழுத்து பத்து ஆண்டுகள் கழித்து வெளிவரும்போது அவருள் சிலர் இல்லை. அவர்களும் இருந்து இந்த நூலின் படியினை அவர்கள் கையில் தந்திடும் வாய்ப்பினைப் பெற்றிருப்பேனாயின் நான் இன்னும் பெரிதும் மகிழ்ந்திருப்பேன். எப்படியோ இன்று இந்த நூல் என் நூல் வரிசையில் ஒன்றாக இடம்பெறுகின்றது. இதைத் தொடர்ந்து பெரும்பாலாக அமைந்த என் சென்னை வாழ்வைப் பற்றி எழுதலாமா வேண்டாமா என எண்ணமிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்றுள்ள என் வாழ்நாளில் பாதிக்கு மேல் சென்னை வாழ்வாகவே அமைந்துவிட்டதோடு. இனியும் இச்சென்னை வாழ்வே நிலைபெறுமோ எண்ணுமாறு செயல்கள் அமைகின்றன. எனினும் சிற்சில சமயங்களில் எல்லா