பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2. திருமணமா? வெறுமணமா ?

நான் என் அன்னையின் ஆதரவிலும் அரவணைப்பிலும் வாழ்ந்துவந்தவன். இளம் வயதிலேயே தந்தையை இழந்து, தாயும் பாட்டியும் பாதுகாக்க வளர்ந்தவன் நான். அன்னையோடு பிறந்த பெரிய அன்னையும் பெரியப்பாவும் பக்கத்து வீட்டிலேயே வாழ்ந்துவந்தாலும் அவர்கள் எங்களோடு நெருங்கிப் பழகாமலேயேதான் இருந்தார்கள். இருவீட்டிற்கும் இடையாயிருந்து மூடிவைக்கப் பெற்றிருந்த கதவு திறக்கப்பெற்றாலும், உள்ளக் கதவுகள் திறக்கப்பெறவில்லை என்றே அந்த நாளிலேயே நான் ஓரளவு அறிந்துகொண்டேன். அவர்தம் 'சொத்து' அனைத்தும் எனது பாட்டனார் வழியே பெரியம்மாவுக்குச் சேர்ந்தது என்றாலும், எனது பெரிய தந்தையாரும் சிறிது தம் பேருக்கும் வாங்கிவைத்திருந்தார். உள்ள பயிரிடும் நிலத்தையும் குத்தகைக்கு விட்டிருந்ததால் அவர் ஓய்வாகவே வீட்டில் இருந்தார். அவர்களுக்குக் குழந்தைகள் கிடையா. எனவே பெரியம்மா என்னிடம் பரிவு காட்டினர்கள். ஆனால் பெரிய தந்தையார் அவருடைய அண்ணலாருக்குப் பிறந்திருந்த ஒரு மகனை அழைத்து வந்து எல்லாச் சொத்துக்கும் உரிமையாக்க விரும்பினர். இதுபற்றி இரண்டொருமுறை அவர்கள் பேசிக்கொண்டது என் காதில் விழுந்தாலும் எனக்கு அது பற்றி எண்ணத் தோன்றவில்லை. ஆயினும் இவர்கள் பொருள் நமக்கு எதற்கு?’ என்று மட்டும் பிஞ்சு உள்ளத்தில் கேள்வி எழுந்தது. என் அன்னையார் ஆதரவு நிரம்ப இருந்த காரணத்தால் நான் எது பற்றியும் கவலைப் படவில்லை. ஆயினும் இறுதியில் எப்படியோ அவர்கள் சொத்து அனைத்தும் எனக்கே உரிமையாகும் நிலை உண்டாயிற்று. எனது பெரிய அன்னயார் மீனாட்சி அம்மாள் அவர்தம் இறுதி நாளில் அவருடைய பொருள் அனைத்தையும் எனக்கும் என் மனைவி சந்திராமணிக்கும் உரிமையாக்கிச் சென்றார்கள். அவர்தம் அன்பினையும் பிரிவினையும்