பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

காஞ்சி வாழ்க்கை


அறிஞர்கள் அதுகாலை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தே அணிசெய்து விளங்கினர். அப்புலவர் கூட்டத்தை ஆசிரியர் அறையில் ஒருசேரக் காண்பதே கண்கொளாக் காட்சியாக விளங்கிற்று. அத்துணை அறிவாற்றல் மிக்க ஆசிரியர் அனைவரும் எங்கள் தொடக்க வகுப்பிற்கும் பாடம் எடுத்து எங்களுக்கு அறிவு கொளுத்திய தன்மையை எண்ணி எண்ணி வியந்ததுண்டு. விபுலானந்த அடிகளார் தொடங்கிக் கடைசி ஆசிரியர் வரையில் எங்கட்கு வந்து பாடம் நடத்தினர். அவர்கள் தந்த பிச்சைதான் இன்று ஓரளவு நான் ‘தமிழாசிரியன்’ என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை எனக்கு உண்டாக்கிற்று என்பதில் ஐயமில்லை ! அவர்கள் அனைவரும் என் உள்ளத்து உறையும் தெய்வங்களாவர்.

நான் பயின்ற முதலாண்டில் விபுலானந்த அடிகளார் தலைவர் என்றேன். ஆம்! எப்படியோ நான் அவரோடு நெருங்கிப் பழகினேன். அவர்கள் மேற்கொண்ட சில சமுதாயச் சீர்திருத்தப் பணிகளில் பங்கும் கொண்டேன். அதுகாலை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி இன்னும் என் நினைவில் உள்ளது. ஒருநாள் அடிகளாரும் மாணவர் சிலரும் அருகில் உள்ள ஒரு சேரிக்கு, அதைத் தூய்மைப்படுத்தி, குழந்தைகளுக்குத் தின்பண்டமும் தருவதற்காகச் சென்றோம். வடை, சுண்டல் இவைகளை இரு கூடைகளில் எடுத்துச் சென்றோம். அப்போது திருவேட்களம் திருக்கோயிலின் பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒருசிறுவனும் எங்களுடன் சேரிக்கு வந்துவிட்டான். அவன் அப்பல்கலைக்கழகத்தே பணிசெய்யும் உயர்ந்தார் ஒருவர் மகன் என அறிந்தேன். கடைசிவரையில் இராது சற்று முன்னே திரும்பிவிட்டான் அவன். நாங்கள் எங்கள் பணியினை முடித்துத் திரும்பும் போது, அவனுடைய பெற்றோர்கள் அவனைத் தெருக்கம்பத் தில் கட்டிப்போட்டு, தலையில் சாணத்தால் ‘அபிஷேகம்’ செய்துகொண்டிருந்தனர். சேரியில் சென்றமையால் அவன் கெட்டுவிட்டான் என்றும், அவனைத் தூய்மைப்படுத்தவே அச்செயல் செய்யப்படுகிறது என்றும் சொன்னார்கள்.