பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை நகரில்

35


நாங்கள் நைந்தோம் – அடிகளார் உள்ளம் வெந்தது. அவர் தம் சீர்திருத்தக் கருத்தை வெறுக்கும் வகையிலும் கண்டிக்கும் முறையிலும் அவரை, அவ்வூரில் சிவன் கோயிலில் உள்ள நல்ல குடி தண்ணீரை எடுக்கவிடாது தடுத்தனர். அவர் அதற்கெலாம் கலங்காது–உப்பு நீரையே உண்டு, பயன்படுத்தி, அண்ணாமலை நகரில் வாழ்ந்து வந்தார். அவர் தம் உயர்ந்த தோற்றமும் உயர்ந்த கல்வி அறிவும் தூய காவி உடையும் மெய்ம்மைத் துறவு நிலையும் யாழ்ப்பாண நலியியலுடன் பேசும் தெய்வத்தமிழும் எங்களை யும் உயர்த்தின. தற்போது அவர் பிறந்த ஊரில் அவருக்குச் சிலை எடுப்பதறிந்தேன். அங்கு வெளியிடப்பெறும் மலருக்கு நான் அண்ணாமலையில் அவரடியின் கீழ் இருந்து பெற்ற அனுபவத்தையே தீட்டி அனுப்பினேன்.

அந்த ஆண்டின் இறுதியில் அவர்கள் பல்கலைக் கழகத்திலிருந்து விலகுகிறார் என்ற செய்தி எங்களைத் துன்பத்தில் மூழ்க வைத்தது. தமிழுக்கென அவரை அண்ணாமலை அண்ணல் வருந்தி அழைத்து வந்து ஏற்றுப் போற்றினார் என அறிந்தேன். எனினும் அவர் தொடர்ந்து இராமல் செல்வது வியப்பாகவே இருந்தது. தமிழுக்கென அமைந்த அப்பல்கலைக்கழகத்தில் ஏனோ அன்று தொட்டு இன்று வரை தமிழ்த்துறைத் தலைமை ஏற்கும் பெரியார்களெல்லாம் ஏதோ ஒருவகைக் கசப்போடு வெளியேறுகிறார்கள் என்று எண்ணி பார்க்கிறேன். விடை கிட்டவில்லை.

அடுத்த ஆண்டு நாவலர் சோமசுந்தர பாரதியார் தமிழ்த்துறைத் தலைமை ஏற்றார். அவரும் உயரத்தில் அடிகளாருக்குச் சளைத்தவரல்லர். இவருடைய போக்கும் நிலையும் அவரினும் மாறுபட்டுத் தோன்றினும் தலைமைக்கு ஏற்றவர் என்றே அனைவரும் கூறினர். இவரும் அண்ணாமலை அரசரால் விரும்பி அழைத்து வரப்பெற்றவர் என அறிந்தேன். இவரைத் தவிர்த்து மற்றவர்களெல்லாம் நான் முன் காட்டிய ஆசிரியப் பெருந்தகைகளே. அவர்கள் வழிகாட்ட நாங்கள் உண்மையில் மாணவர்களாகவே இருந்து கற்றோம்.