பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை நகரில்

37


இரண்டாம் ஆண்டில் பல்கலைக்கழத் தமிழ்ப்பேரவையின் அமைச்சனாகப் பணியாற்றினேன். திரு. அ. சிதம்பர நாதனார் தலைவர். எங்கள் கூட்டங்களில் பேராசிரியர்கள் பாரதியார், சேதுப்பிள்ளை, வரலாற்றுப்பேராசிரியர் சீனி வாசாச்சரியர் போற்றவர்களும் பிறதுறைப் பேராசிரியர்களும் பங்குகொண்டு எங்களை ஊக்குவிப்பர். பல அறிஞர்கள் எங்கள் பேரவை நிகழ்ச்சிகளில் பங்குகொண்டனர். முன் காட்டிய ‘காக்கா பிடித்தல் கற்றறிந்தார்க் காகாது’ என்பன போன்ற பல தலைப்புக்களில் பேராசிரியர்களே பேசுவர். அவ்வாண்டின் தமிழ்ப் பேரவைப்பணி சிறக்க நடைபெற்றது. அப்பேரவையின் ஆண்டு விழாவிற்குத் திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் வாழ்த்தியல் விரிவுரையாற்ற வந்தார். நானே சென்னை சென்றபோது நேரில் கண்டு அழைத்து ஏற்பாடு செய்தேன். முந்திய புலவர் வரிசையின் அடுத்த வாரிசாக அவர்வந்து அழகிய சொற்பொழிவாற்றினார். அதுதான் அவர் அண்ணாமலையில் ஆற்றிய முதற்பணி என எண்ணுகிறேன். பிறகு அங்கேயே பேராசிரியராகப் பணியாற்றி, அங்கிருந்தே மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகும் பேறு பெற்றார். அவரை அன்று முதல் இன்றுவரை நான் உற்றவராகவே போற்றுகின்றேன். அவர் துணைவேந்தரான பின் முதல் வெளிவந்த என் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரை நடை வளர்ச்சி’யை அவருக்கே ‘முதல் தமிழ்த் துணைவேந்தர்’ என்ற பெருமிதத்தில் உரிமையாக்கினேன். அவர் தொண்டு ‘சிறப்பதாக’ என வாழ்த்தி மேலே செல்கிறேன்.

இரண்டாம் ஆண்டில் பல வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றேன். விடுதி வாழ்க்கை எத்தகையதென அறிந்தேன். என்னினும் முதிர்ந்தோரான–அறிவில் சிறந்த ஆறுமுக முதலியார், ஏ. சி. செட்டியார் ஆகியோருடன் நெருங்கிப் பழகி அவர் தம் அறிவுரைகளைப் பெற்றேன். அந்த ஆண்டில் நடைபெற்ற நாள் மங்கலவிழாவில் தமிழகப் புலவர் பெரு மக்கள் அனைவரும் வந்திருந்தார். இராகவையங்காருடைய