பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை நகரில்

41


இடையில் இருந்த ஒரு திங்களில் பலமுறை பாரதியார் வீட்டுக்குச் செல்வேன். பலபொருள்களைப் பற்றிப் பேசும் என்னுடன் ஒருமுறையாவது நடந்த நிகழ்ச்சியினையும் வகுப்புக்கு வராததையும் பற்றிக் கேட்டதே இல்லை. அவர் தம் பெருந்தன்மையை எண்ணி மனமாரப் போற்றினேன். பிறகு, தேர்வை முடித்து வீடுதிரும்பும்போது மறுபடியும் நான் பயில வருவதைப்பற்றி அவர்கள் ஒன்றும் கேட்கவில்லை. அவர்தம் இளங்குழந்தைகளின் புகைப்படங்களைத் தந்து அனுப்பினர். எல்லா ஆசிரியர்களிடத்தும் விடை பெற்றுப் புறப்பட்டேன். கந்தசாமியார் அவர்களும் என் தலைமேல் கரம்வைத்து வாழ்த்தி வழியனுப்பினார்கள். அவர்களிடம் பெற்ற அந்த நல்ல பண்பு என் வாழ்வில் நன்கு எனக்குப் பயன்படுகிறது.

என் வகுப்புப் படிப்பு அத்துடன் முடிவடைந்துவிட்டது. தேர்வின் முடிவில் அந்த வகுப்பில் நானே முதல்வனாகத் தேர்ந்தேன் என அறிந்தேன். எனினும் மேலே படிக்கச் செல்லவில்லை. பாரதியாரையோ மற்ற புலவர்களையோ நான் காணவும் இல்லை. ஊரில் இருந்துகொண்டு மேல் எப்படிப் பயில்வது என்று எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன். அதுகாலை நான் அதிகமாகக் கடிதம் எழுதும் வழக்கமும் கொள்ளவில்லை. பாரதியார் நான் படிக்காது விட்டது பற்றி என்ன சொல்லுவாரோ என்ற பயம் மட்டும் என் மனதில் ஊசலாடிக் கிடந்தது. எனினும் நான் கடிதம் எழுதவில்லை.

ஏறக்குறைய இரண்டாண்டுகள் கழித்துத் திருவண்ணாமலையில் சைவசித்தாந்த சமாச ஆண்டுவிழா நடைபெற்றது. அதற்குத் தலைவர் விபுலானந்த அடிகளார். பாரதியார் சொற்பொழிவும் அதில் இருந்தது. நான் இளைஞர் மாநாட்டில் பங்குகொள்ளச் சென்றிருந்தேன். இருபெரும் பேராசிரியர்களையும் ஒருசேரப் பார்க்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருப்பினும் பாரதியார் என்ன சொல்வரோ