பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

காஞ்சி வாழ்க்கை


பகலெல்லாம் திரு. வி. க. விடனும் பிற அன்பர்களுடனும் பொழுதைக் கழித்தேன். திரு. வி. க. அவர்கள் படிப்பை விடாது தொடரவேண்டும் எனவும் மேன்மேலும் வளரும் வாய்ப்பு உண்டு எனவும் எனக்கு அறிவுரைகூறி வாழ்த்தினார்கள். பச்சையப்பர் கல்லூரியில் பணி ஏற்று வாழ்ந்தகாலை, அவர்களை அடிக்கடி காணும்போதெல்லாம், பல ஆண்டுகளுக்குமுன் அவர்கள் வாழ்த்திய அந்தப் பெருநிலை என் நினைவுக்கு வரும்.

இந்துமத பாடசாலையில் பணியாற்றிய காலத்தில் பலவிடங்களில் சொற்பொழிவு செய்யச் செல்வது வழக்கம். சைவசித்தாந்த சமாசத்தில் நிலைபெற்ற தொடர்பு உண்டாயிற்று. அந்த ஆண்டு சமாச ஆண்டு விழா திருவதிகையில் நடைபெற்றது. அப்பரை ஆட்கொண்ட அருட்பெருந் தலத்தில்–திலகவதியாரின் தெய்வத்தொண்டு நடந்த சிறந்த தலத்தில் நடைபெற்ற அந்த விழாவில் நானும் கலந்து கொண்டேன். எங்கள் பள்ளியிலிருந்து சில மாணவர்களையும் உடன் அழைத்துச் சென்றோம். சமாசச் செயலாளராகச் செம்மைப்பணி ஆற்றிய திரு. ம. பாலசுப்பிரமணிய முதலியார் அவர்கள் எழுதிய ‘அப்பர் நாடகத்’தை அங்கே மாணவர் வழியே நடித்துக் காட்டினோம். கண்டவர் மகிழ்ந்தனர். அம் மாநாட்டில் பலர் எனக்கு அறிமுகமாயினர். நாடகத்தின் சிறப்பினைக் கண்டு அப்பா வா. தி. மா. அவர்கள் அதற்கு முதலாக நின்ற என்னைப் பாராட்டினர்.

எனது மணவாழ்வு மங்கியது என்று கூறினேன். அது பற்றிய தொடர்பு நீண்டுகொண்டே வந்தது. என்னுடன் பணியாற்றிய பல ஆசிரியர்கள் அதுபற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தனர். நான் சொல்வதறியாது திகைத்தேன் – சிலவேளைகளில் தனிமையில் கண்ணீர்விட்டுக் கதறி அழுதேன். எனினும் அவர்கள் அதுபற்றியெல்லாம் அறிந்து, என்னை அறியாமலே ஒருசெயலை மேற்கொண்டனர். அவருள் ஒருசிலர் —நான்கைந்துபேர் என நினைக்-