பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்துமத பாடசாலை

53


வண்டிக்கு திண்டுக்கல்லுக்கு ஒரு ‘டிக்கெட்’ எடுத்தேன். இரவெல்லாம் அந்த ரெயிலில் சென்றேன். அந்தக்காலத்திலெல்லாம் இப்படி வழியும் கூட்டம் ரெயிலில் கிடையாது. எனவே நன்கு உறங்கித்தான் சென்றதாக நினைப்பு. திண்டுக்கல் சென்றதும் இறங்கினேன். எனக்கு அந்த ஊர் புதியது. ரெயிலடியிலேயே பல்லைத் துலக்கிக்கொண்டு பக்கத்தில் இருந்த விடுதியில் சிற்றுண்டி கொண்டேன். பிறகு ஒரு ஆனாதைப் பிள்ளையைப் போன்று, கையில் வைத்திருந்த சிறு பையுடன் மேற்குநோக்கி வெகுதூரம் நடந்தேன். ஏன் போகிறேன்? எங்கே போகிறேன்? என எனக்கே தெரியவில்லை சுமார் 10 மணிவரை நடந்திருப்பேன். பின் சாலையின் ஒரு ஓரத்தில் தங்கிவிட்டேன். ஒரு வேளை என் பெற்றோர் என்னைத் தேடிக்கொண்டு வந்தாலும் அவர்கள் கண்களில் படாதிருக்கவேண்டியே இந்த ஏற்பாட்டினைச் செய்தேன். பிறகு அன்றைப்பொழுதை எப்படிக் கழித்தேன் என்பது எனக்கு இன்று திட்டமாக நினைவில் இல்லை. எப்படியோ அன்றைப்பொழுதை அறியாத திண்டுக்கல்லில் கழித்து, இரவு 9 மணியளவில் திருச்சிக்குத் திரும்பும் ஒரு ரெயிலில் திருச்சி வந்து சேர்ந்தேன். அங்கேயும் ரெயிலடியிலேயே படுத்து உறங்கினேன். மறுநாட்காலை எழுந்து காவிரியில் சென்று மூழ்கி பையில் இருந்த மாற்றுடையைத் தரித்துக்கொண்டு, சிராப்பள்ளிக் குன்றுடை யானையும், திருவரங்கத்துப் பள்ளிகொண்டானையும் ஆனைக்கா அண்ணலையும் கண்டு வணங்கினேன். பிறகு நண்பகல் உணவுக்குப் பின் ஒரு சத்திரத்தில் இடம் கேட்டுத் தங்கினேன். அன்றும் மறுநாளும் எப்படியோ பொழுதினைக் கழித்தேன். திரும்பும்போது ஒருநாள் தில்லைக்கு வந்ததாக நினைவு. எப்படியோ நான்கைந்து நாட்கள் சுற்றித் திரிந்து விட்டு, பிறகு வாலாஜாபாத் வந்து சேர்ந்தேன். சேர்ந்த அன்று முறையாகப் பள்ளிக்குச் சென்றேன். ஆனால் அதற்கு முன்பே என் வீட்டிலும் ‘அவர்கள்’ வீட்டிலும் என்ன நடைபெற்றிருக்கும் என்று அறிய அவாவிற்று என் உள்ளம்,