பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

காஞ்சி வாழ்க்கை



இவற்றையெல்லாம் என் அன்பர் கூறக்கேட்டு நான் கதறி அழுதேன். அன்னையை இத்தனை அல்லலுக்கு இச் செயல் உள்ளாக்கும் என அறிந்திருந்தால் அதை மேற்கொண்டே இருக்கமாட்டேன். எனினும் இதனால் பயன் விளையும் என்று எதிர்பார்த்த இடத்தில் பயன் விளையவில்லை என அறிய மேலும் நடுங்கினேன். இச்செய்தியைக் கேட்ட எனது மாமனார் வீட்டில் உள்ள அனைவரும் 'ஒரு சனியன் விட்டது' என்று கூறியதோடு, மகிழ்ச்சியோடு வேறு பல பேசினர்கள். அவர்கள் கவலை கொண்டதாகவே தெரியவில்லை. ஆம்! அவர்கள் அனைவருக்கும்-அந்த மனைவி உட்பட அனைவருக்கும் நான் 'ஒரு சனியனா'கவே இருந்தேன். இன்று அவருள் வாழ்வார்க்கும் அப்படியே இருக்கிறேன்.

குணமங்கலத்தை-எனது கற்பனை ஊர் உண்மையாக நின்ற நல்லூரை-அன்று முதல் காணவேண்டும் என்று எண்ணுவேன். ஆயினும் பல ஊர்களைச் சுற்றித் திரிந்த எனக்கு அந்த ஊருக்குச் செல்ல வாய்ப்பு இல்லை. இன்னும் அந்த எண்ணம் விடவில்லை. மேலும் நான் கனவு கண்ட அந்த நல்ல ஊரிலுள்ள பெண் ஒருத்தியை அந்த வேளாண் குலத்தில் மணக்காவிட்டாலும், அதே மாவட்டத்தில் அத்தகைய வேளாளர் நிறைந்த ஊரில் பிறந்த பெண் ஒருத்தியை எனக்கு மருமகளாக்கிக்கொண்ட நிலையின - என் மகன் மெய்கண்டானுக்கு மனைவியாக ஏற்ற நிலையினை - இன்று எண்ணி மகிழ்கின்றேள். விரைவில் அந்த ஊரைச் சென்று காண்பேன் என எண்ணுகின்றேன்.

ஊரே கொந்தளிக்கும் இந்த நிகழ்ச்சி அவர்களுக்கு எந்துணையும் மாற்றத்தை உண்டாக்காததோடு, நான் மறுமணம் புரிந்துகொள்வதில் மகிழ்ச்சிகொண்ட அவர்கள் நிலை கண்ட அனைவரும் என்னை உடனே மறுமணம் புரிந்து கொள்ளுமாறு வற்புறுத்தினர். நான் அந்த எண்ணத்தைத் தள்ளி வைத்துக்கொண்டே வந்தேன்.