பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்துமத பாடசாலை

57



ஊரிலிருந்து வாலாஜாபாத் திரும்பி இரண்டொரு நாட்கள் நான் என் ஊர்சென்று அன்னையாரைக் காணவில்லை. எனக்கு அச்சம் ஒருபுறமும் கண்டு மன்னிப்புப் பெற வேண்டும் என்ற ஆசை ஒருபுறமும் எழுந்தது. அதற்குள் ஊரிலிருந்த பலர் என் புது மனைவியைக் காணச் சாரி சாரியாக வாலாஜாபாத் வந்தனர். அவர்கள் வழி எல்லாம் எனது அன்னையாரின் அவலநிலை உணர்ந்தேன். உடனே எனது ஆசிரிய நண்பர்கள் இருவரை உடன் அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றேன். சென்று தாழ்வாரத்தில் இருந்த பலகையில் உட்கார்ந்தேன். சோகமே உருவாக உட்கார்ந்திருந்த அன்னையார் அப்படியே வந்து கட்டிக் கொண்டு அழுதார்கள். ஊரே திரண்டுவிட்டது. நான் மணம் செய்துகொள்ளவில்லை என்று எவ்வளவோ சொல்லியும் அவர்கள் ஆறுதல் பெறவில்லை. அந்த நாளையும் அவர்கள் நிலையையும் இன்று நினைத்தாலும் நடுக்கம் உண்டாகின்றது. பிறகு ஒருவாறு தேற அனைவரும் விடை பெற்றுச் சென்றனர். அன்னையார் அன்று இரவெல்லாம் என்னை மணம் பற்றிப் பலமுறை கேட்டு 'இல்லை' என்பதை ஒருவாறு தெளிந்து அமைதியுற்றனர்.

வருந்தவேண்டியவர் வருந்தா நிலை கண்ட ஊராரும் உற்றாரும் எனக்கு மறுமணம் செய்துவைக்க வேண்டியதே முறை என்ற முடிவிற்கு வந்தனர். நண்பர் பலரும் என்ன வற்புறுத்தினர். எனது அன்னையார் விரைவில் பெண்தேட முயன்றனர். நான் மறுபடி எங்கே உண்மையில் வேறு யாரையேனும் மணம் செய்துவிடுவேனே என்று அச்சம். ஆனால் நான் 'சற்றே பொறுங்கள்' என்று சொல்லி, வேண்டாம் என்னாது, அவர்கள் விழைவைப் பின் சிறிது காலத்தில் நிறைவேற்றலாம் என ஆறுதல் கூறினேன். அவர்களும் ஒருவாறு அமைந்தார்கள்.

இந்துமத பாடசாலையில் ஆசிரியராக இருந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சிகள் இன்னும் பலப்பல உள்ளத்தே