பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்துமத பாடசாலை

63


கிழக்குத்திக்கில்-தெற்கில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நான் காட்டிய திசையில் திரும்பிய அவர்கள், கோயில் காட்சியை நேரே கண்டதும் திகைத்தனர். என்னிடம் கொண்ட அவர்கள் பக்தி அதிகமாயிற்று. நான் ஊர் பேர் அற்றவனுதலால் அவர்களால் தேட முடியாது என்ற காரணத்தால் அவர்கள் விலாசத்தை நினைவூட்டிக் கட்டாயம் அவர்கள் ஊருக்கு வந்து மடம் அமைக்குமாறு வேண்டிக் கொண்டனர். அவர்கள் யாரோ? பிறகு அவர்களை நான் காணவே இல்லை. ஆயினும் அவர்கள் காட்டிய பரிவும் பாசமும் பக்தியும் பண்பும் இன்றும் என்முன் நிழவிடுகின்றன . அந்தத் துறவு நிலையிலே நான் நிலைத்திருப்பேனாயின் தற்போது எவ்வாறு இருப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எங்கோ இமயமலைச்காரலில் சிவானந்தர் ஆசிரமத்தில் நானும் ஒரு சிவானந்தமாகத் தங்கி இருந்திருப்பேனே அன்றி வேறு எங்கிருந்திருப்பேனோ?

தணிகையில் இறங்கினேன். மாலை 8 மணி இருக்கும். மலைக்குப் போகும் வழியில் அஞ்சல் நிலையம் இருந்தது. அங்கேயே உட்கார்ந்துகொண்டு எடுத்துச்சென்ற தாளில் எழுதுகோலால் நான்கைந்து பக்கங்கள் என் உள்ளக்கிடக்கைகளை யெல்லாம் கொட்டி எழுதி, நான் துறவியாக முடிவுசெய்துவிட்டேன் என்பதையும் விளக்கி, என்னைத் தடுக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு அழுத நிலையில் ஒரு உறைவாங்கி அதில் இட்டு அன்னையாரின் முகவரியையும் எழுதிப் பெட்டியில் இட்டுவிட்டேன்.

தணிகை முருகன் என் நினைவு தொடங்கப்பெற்ற நாளிலிருந்து நெஞ்சில் இருப்பவன். இன்பம் துன்பம் இரண்டும் அவன் அளிப்பவை. எனவேதான் அங்கே முதலில் சென்று அவன் அருள்பெற முனைந்தேன். குளத்தங் கரையில் வந்ததும் என் நிலை தளர்வுற்றது. படியில் சிறிது நேரம் உட்கார்ந்தேன். பிறகு மேல் எழுந்து கால் கழுவித் தூய்மை செய்துகொண்டு மெல்ல மலைமேல் ஏறினேன். வழிநெடுக