பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

காஞ்சி வாழ்க்கை


உள்ள குரங்குகளும் பறவைகளும் ஒலி எழுப்பிக்கொண்டிருந்தன. மாலை வேளை பூசைக்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன, நல்ல அந்த வேளையில், அவனேயன்றி வேறென்று அறியா நிலையில் நான் உச்சியை அடைந்து கோயிலை வலம்வந்து உள் சென்றேன். அப்போது தீபாராதனை நடந்துகொண்டிருந்த நேரம் என நினைக்கிறேன். தீபாராதனை முடியும் வரை நின்றிருந்தேன். கூட்டம் கலைந்தது, முருகன் அருகில் சென்று அழுதேன்....அலறினேன். அருகில் இருந்த ஐயர் கூடத் தவறாக எண்ணி இருப்பர். நான் என்ன செய்வது ? அடுத்துச் செய்ய வேண்டியது அறியா நிலையில் நான் வேறு என்ன செய்ய முடியும். வாய் பாடிற்று, கண் அவனைக் கண்டு நின்றது. கருத்து ஒரு வழிபட்டது என எண்ணுகிறேன் யாரும் பக்கத்தில் இல்லை. ஏதோ ஓர் அசைவினை உளத்தில் பெற்றேன். எங்கோ பேசுவது கேட்டது. 'வீட்டிற்குத் திரும்பிப்போ' என்ற ஒலியாக அது என் காதில் விழுந்தது. தலைதூக்கி நிமிர்ந்தேன். முருகன் முன்னே சிரித்துக்கொண்டிருப்பது போன்ற நிலை உணர்ந்தேன். திரும்பிச் செல்ல வேண்டுமோ? என்று உள்ளம் கேட்டது. 'ஆம்' என்று உள்ளத்திலிருந்தே ஒலி கிளம்பிற்று. அப்படியே நெடுநேரம் நின்றிருப்பேன். பலர் வந்து சென்றிருக்கக் கூடும். அடுத்த பூசைக்கு நேரமானதால் என்னை வெளியே செல்லச் சொன்னர்கள். நான் அன்னையர் இருவரையும் வணங்கி, மறுமுறை அத்தனுக்கு வணக்கம் செலுத்தி மும்முறை வலம் வந்து வெளி மண்டபத்தில் உட்கார்ந்தேன். அப்போது தான் சுய உணர்வு வரப்பெற்றேன். உடன் எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உருண்டன. திருப்பிப் போகவா ? என்ற கேள்விக்கு விடையும் பெற்றேன்.

தணிகை முருகன் முன் மண்டபத்தில் நான் உட்கார்ந்திருந்த நிலையில் என் உள்ளம் அங்கம்பாக்கம் சென்றது. 'என் கடிதத்தைக் காண்பார்களாயின் அன்னையின் உள்ளம் எவ்வளவு கொந்தளிக்கும்-கொதிக்கும்-வாடும்-வருந்தும்