பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நாற்பது ஆண்டுகளுக்கு முன்
நான்

மனிதன் வாழப்பிறந்தவன். பரந்த அண்ட கோள வாழ்வியலில் மனித வாழ்வு ஒரு நொடிக்கும் குறைந்தது. என்றாலும் அதில் அவன் வாழவே பழகவேண்டும். உள்ளத்தில் உண்மை ஒளியும் உதட்டில் வாய்மையும் செயலில் செம்மையும் சிறக்க வாழும் மனிதனே அந்த நொடி எனும் கால எல்லையைத் தாண்டி நெடிது வாழ்பவனாவான். இந்த மனித இனம் தோன்றி எத்தனையோ ஆண்டுகள் ஆயின. எனினும் அந்த இனம் பற்றித் திடமான வரலாறு இல்லை. இந்த நூற்றாண்டில் பல்வேறு சாதனங்கள் உண்டானமையின் பலவகையில் மனித வரலாறு விளக்கப் பெறுகிறது. அறிஞர்கள் தம் வாழ்வைப் பற்றி நூல்களும் வடித்துள்ளார்கள். அந்தப் பெருவரிசையில் ஒன்றாக இது அமையாததாயினும் ஓரளவு இந்த நூற்றாண்டின் இடைக் காலத்தில் இருந்த காஞ்சியைச் சார்ந்த ஒரு நிலையினை இது காட்டும் என நம்புகிறேன்.

பல பேரறிஞர்கள் நாட்குறிப்பினை, முறையாக எழுதி வைத்து, அடுத்துத் தேவையாயின் அவற்றைத் தொகுத்தும் விரித்தும் நூல்களை வெளியிடுவர். சில நாட்குறிப்பு ஏடுகள் அப்படியேயும் அச்சிடப் பெற்றுள்ளன. மேலைநாடுகளில் இத்தகைய சுய வரலாறுகளும் மற்றவர்கள் தம் ஆசிரியர் போன்றார் பற்றி எழுதிய வரலாறுகளும் அதிகமாக உள்ளன என அறிகிறோம். எனினும் நம் தாய்நாட்டில் அதிலும் தமிழ்நாட்டில் அதிகமாகத் தனி மனிதர்தம் வரலாற்று நூல்கள் இல்லை. பள்ளிப் பிள்ளைகளுக்கென எழுதப் பெற்ற ஒருசில வரலாற்று நூல்கள் உண்டேனும் தம் வரலாற்றைத் தாமே எழுதும் மரபு இன்னும் நம்மிடை வளரவில்லை. திரு. வி. க. போன்ற பெரியவர்களுள் இரண்டொருவர் எழுதிவைத்த வாழ்க்கைக் குறிப்புகள் உள்ளன. அந்த வரிசையில்