பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சி வாழ்க்கைத் தொடக்கம்

77


ஆர்வத்தோடு இருந்தனர். அந்த நாட்கள் தமிழுக்கு மலர்ச்சி உண்டாகத் தொடங்கிய காலம். எனவே பலர் பள்ளியிலும் வெளியிலும் தமிழ் பயில வேண்டுமென ஆர்வத்தோடு வந்தனர். ஏழெட்டு அன்பர்கள்—பிள்ளை பாளையத்திலிருந்தும் பிறவிடங்களிலிருந்தும் நான் தங்கியிருந்த இடத்துக்கு வந்து தமிழ் பயின்றனர். பள்ளியிலும் பல ஆசிரியர்கள் தனியாகத் தமிழ் பயின்றனர். மாணவருள் சிலரும் திருக்குறள் போன்றவற்றைத் தனியாக மாலைவேளையில் என்னிடம் பயின்றனர். நானும் மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்லும் பேராற்றல் பெற்றவன் அல்லனாயினும், பல நூல்களைப் பயின்று, பொருள்கண்டு, கூடியவரை அவர்கள் வெறுக்கா அளவில் பாடல்களைச் சொல்லிக்கொண்டு வந்தேன்.

அதுபோது காஞ்சியில் என் உள்ளம் கலந்த சில பெரியவர்களைப்பற்றி எண்ணவேண்டியுள்ளது. அவருள் பெரும்பாலோர் இன்னும் வாழ்கின்றனர். அவர்களுள் ஒரு சிலர் என் உள்ளத்தில் நிலைத்த இடத்தைப் பெற்றுள்ளனர். இரட்டை மண்டபத்தை அடுத்துள்ள மாளிகையில் காலை 6 மணிக்கே மூழ்கி, நீறு அணிந்து, ஒளி பொருந்திய முகப் பொலிவுடன் தம் ஆசனத்தில் உட்கார்ந்து வருவார்க்கெல்லாம் வழிகாட்டியாக நிற்கும் விசுவநாத ஐயர் அவர்தம் வாழ்வும் போக்கும் என்னைக் கவர்ந்தன. கோடையிலும் குளிரிலும் எந்த நாளிலும் நேரந் தவறாது அன்று நான் கண்டமை போன்றே இன்றும் ஆங்கே உட்கார்ந்து வருவார்க்கு வழிகாட்டுகின்றனர். அவர் வழக்கறிஞர்-எனினும் நேரிய பண்பாளர், உண்மையாக நேரிய வழக்குகளுக்கே வாதிடுவர், கூடியவரை இருவரையும் ஒற்றுமைப் படுத்தவே அவர் உள்ளம் விரும்பும். அவர் மாலை வேளைகளிலும் குறித்த நேரம் தவறாது, ‘டென்னிஸ்’ ஆடச் செல்வது காண்பதும் சிறந்ததாகும். அவருடைய பிள்ளைகளில் சிலர் என்னிடம் பயின்றனர்.