பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

காஞ்சி வாழ்க்கை


கச்சபேச்சுரர் ஆலயத்துக்கு அடுத்து, அரிய மருத்துவத் தொண்டு செய்துவரும் ஆத்மானந்த அடிகளார் என் உள்ளங்கலந்த பெரியராவர், ஏழைகளுக்கெல்லாம் இலவச மருத்துவம் செய்தும், பலவகையில் மக்களுக்கு உதவியும் நின்ற உண்மைத் துறவியார் அவர். என்றும் கடுத்த முகமே காட்டி அறியாது அமைதியாகப் பேசும் அறிவும் பொலிவும் கூடிய முகத்தோற்றத்துடன் அவர் விளங்குவர். இன்று தளர்ந்த நிலையிலும் அவர் தோற்றத்தில் அந்த ஆக்கப் பொலிவைக் காணமுடியும். இவர்களையன்றி இன்னும் எண்ணற்ற அன்பர்கள் என் கண்முன் நிழலிடுகிறார்கள். அவர்களைப்பற்றியெல்லாம் ஈண்டு எழுதின் காலமும் எல்லையும் கணக்கிடாது நீளும். அவ்வப்போது பின்வரும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப சிற்சிலரை ஆங்காங்கே காட்டி அமையலாம் என எண்ணுகிறேன். ஓராண்டில் பல பொதுக்கூட்டங்களிலும் பேசினேன். ஆக, காஞ்சியில் என் முதலாண்டு பலனுள்ளதாக, நல்லவர் பலரை உற்றாராகப் பெறும் வகையில் அமைந்து என் வாழ்வுக்கு வழிகோலியது என்பது பொருந்தும்.

காலம் நமக்கென நிற்காது ஓடிக்கொண்டிருக்கிறது; அப்படியேதான் கடிமணமும் போலும், நான் வேண்டாம் என்று தள்ளிக்கொண்டே வந்த மறுமணம் முடியும் நாளும் வந்துவிட்டது. எந்த வகையிலும் எனது மாமியார் வீட்டார் என் வாழ்வை மலரவைக்க விரும்பவில்லை என அறிந்ததாலும் வேறு பிற சூழல்களாலும் நான் மறுமணத்துக்கு இசைய வேண்டிய நிலை உண்டாயிற்று. முன்னைய நிகழ்ச்சிகளால் நான் மறுமணம் செய்துகொள்வதிலும் துறவியாவதிலும் அவர்கள் வருந்தவில்லை என்பதை அறிந்த பிறகும், அன்னையும் பிறரும் வேண்டிய நிலையிலும் நான்வேறு என்ன செய்ய முடியும்? மேலும் ஓரிரு சூழ்நிலைகளும் அதற்குக் காரணமாக அமைந்தன.

நான் இருபத்தைந்து வயது நிரம்பிய வாலிபன். எனினும் பலர் என்னிடம் தனியாகவும் வீட்டிற்கு வந்தும்