பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

காஞ்சி வாழ்க்கை


துணையானார் போலும். அதை ஓரளவு மறைமுகமாக கண்டிக்கும் போது, அவர் என்னையும் அவருக்கு உறவாக்க முயல்வாரோ என்ற ஐயம் பிறந்தது. தனிமையில் வாழ்வதில் இத்தனைச் சங்கடங்கள் இருக்கின்றதென்பதை அப்போது தான் நான் அறிந்தேன். எனவே அன்னையார் ஏற்பாடு செய்த மணமுயற்சிக்கு இணங்கினேன். மேலும் ஊரில் இருந்த என் அன்னையாரும் பெரிய அன்னையாரும் தனித் தனியாகச் சமையல் செய்துகொண்டு, தனித்தனியாகப் பக்கத்தில் பக்கத்தில் வாழ்ந்த நிலை எனக்கு வருத்தத்தைத் தந்தது. இருவரும் உடன்பிறந்தவர்களாக இருந்தும், ஏன் ஒன்றாகவே சமைத்து உண்ணக்கூடாது என்று பலமுறை கேட்பதுண்டு. அவரவர் போக்கு அப்படி என்று ஆறுதல் பெறுவதும் உண்டு. மணம் செய்து கொண்டு, காஞ்சியில் வாழ்க்கை தொடங்கினால் பெரும்பாலும் பெரியம்மா அவர்கள் என்னொடு காஞ்சிபுரம் வந்துவிடுவார்கள் என்ற நிலையிருந்ததால் அதன்பிறகு அத்தகைய குழப்பம் உண்டாகாது என்று எண்ணியும் இசைந்தேன். நான் இரு குடிக்கும் ஒருமகனாக நின்றமையின் அக்குடிவளர மணம் செய்து கொண்டு இல்லறம் ஏற்கவேண்டுமென்றனர் பலர்; அதனாலும் இசைந்தேன். என் இசைவினை அறிந்தபின் அன்னை யார் இருவரும் ஏற்பாட்டிற்கு முனைந்தனர். உறவினர் ஒருவரின் மகளையே மணம் பேசினர். அவர்களையே முன்னரே எனக்கு மணம் முடிக்க இருந்தார்களென்றும் எனது விருப்பப்படிதான் வேறு இடத்தில் முந்திய மணம் முடிந்ததென்றும் பிறகு அறிந்தேன். இந்த மண ஏற்பாட்டிலும் ‘அவர்கள்’ சிறிதும் மனம் வருந்தியதாகவோ மாறுபட்டதாகவோ காணவில்லை. எனவே எனது அன்னையர் முடிவே சரியென அனைவரும் கூறினர். அவர்கள் அனை வரும் முன்னின்று மணத்தை ஏற்பாடு செய்தனர். எனது சாதகக் குறிப்பிலும் அதுபற்றிக் குறித்திருந்தது. எனவே அனைவர் விருப்பினை ஏற்றும், குடிநலம் புரக்கக் கருதியும் மணத்துக்கு இசைந்தேன். ஆம்! அந்த மணமும் நல்ல வேளையில் நடைபெற்றது.