பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

காஞ்சி வாழ்க்கை


வெறுங்கையில் தட்டுவதற்குப் பதில், அதை என் கன்னத்தில் ஓங்கித்தட்டி அறைய அதிர்ந்தேன். உடனே எழுந்து அப்படியே ஓடிவிடலாமா என்று எண்ணினேன். நான் முன்னரே மணமானவன் ஆனமையின் அந்தப் பெண் என்மேல் காட்டிய வெறுப்போ அந்த அடியென நினைத்தேன். அன்றி முன்னவர்போன்று இவளும் வேறு யாரையாவது மணக்க நினைத்து நான் குறுக்கிட்டமையால் கொண்ட கோபத்தின் பயனோ அது என எண்ணினேன். பிற சடங்குகள் எப்படியோ நடைபெற்றது. எனக்கு மட்டும் அதன் காரணத்தை அறிந்துகொள்ள அவா உண்டாயிற்று. அக்காலத்தில் மணமான உடனே கைகோத்துப் பேசும் வழக்கம் இல்லை—இருந்தால் கேட்டிருப்பேன். பிறகு நேரில் கேட்கவேண்டிய காலத்தில்—நேரம் நேர்த்த நாளில் அது பற்றி விளக்கம் கேட்டேன். முன்னரே எனக்கு அந்தப் பெண்ணைக் கொடுக்க அவர்தம் பெற்றோர் இசைந்ததாகவும் அவளும் மனமுவந்ததாகவும் என் பெற்றோருக்கும் அது ஏற்றதாக இருந்ததாகவும், அவ்வளவு இருந்தும் நான் வேறு திசையில் சென்றதால் அது தடைப்பட்டு, நான் முன், வேறு மணம் செய்ய நேர்ந்ததாகவும் கூறி, அக்கோபமே அந்தச் செயலாக உருவெடுத்ததெனக் காட்டி, மன்னிப்பு வேண்டிய நிலையில் உண்மை உணர்ந்து உளம் தேறினேன். அடுத்த ஆண்டு வாழ்வு— காஞ்சியில் இரண்டாம் ஆண்டு வாழ்வு-எனது இல்லற வாழ்வாகத் தொடங்கிற்று. எனது பெரிய அன்னையாரும் உடன்வந்து எங்களோடு எங்கட்கு உதவியாக இருந்தனர்.

எனது இல்லறவாழ்வு காஞ்சி அரசவீதியில் ஒரு வீட்டில் தொடங்கியது. நான் குடிசென்ற பிறகுதான் அந்த வீட்டின் சிறப்பை உணர்ந்தேன். ‘கச்சி உலா’ வில் அதன் ஆசிரியர், இறைவன் உலாவரும் தன்மையைக் கூறிக் கொண்டு வருகின்றபோது, இறைவனாம் ஏகம்பன் மாடவீதிகள் மூன்றைக் கடந்து பின், கச்சபாலயம் கடந்து, கம்பன் வீடு தாண்டி, குமரகோட்டம் தாண்டிச் சென்றதாகக் குறிக்-