பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சி வாழ்க்கைத் தொடக்கம்

83


கின்றார். ஆகவே கம்பன் வாழ்ந்த வீடு காஞ்சிபுரம் அரச வீதியில் கச்சபாலயத்துக்கும் குமர கோட்டத்துக்கும் இடை யில் இருந்தது என்பது தேற்றம், அக் “கம்பன்” என்ற பெயரே ‘ஏகம்பன்’ என்ற காஞ்சியிற்கடவுள் பெயரின் முதற் குறை என்றுதானே அறிஞர் காட்டுவர். எனவே கம்பர் காஞ்சியில் வாழ்ந்தார் என்று கொள்வதில் தவறு இல்லை. ‘கற்றார் வாழ் காஞ்சி’ 'கம்பர் வாழ்ந்ததால் பெருமையுற்றிருக்குமன்றோ ! ஆம்! ஆனால் அவர் எந்த வீட்டில் வாழ்ந்தார்? அதைத்தான் உலா உணர்த்துகின்றது. அவர் வழிபாடாற்றிய கலைமகளும் இன்னும் அங்கேயே இருக்கிறது. தெருவின் மேலண்டை வாடையில் உயர்ந்து வளர்ந்த வேப்பமரத்தின் அடியில் அக்கலைமகள் வீற்றிருக்கிறாள். இன்றும் பலர் அவருக்கு வழிபாடாற்றுகின்றனர்.

கம்பர் அக்கலைமகளை வழிபட்டுக்கொண்டு அந்த வீட்டிலேயே குடி இருந்தார் என்று அறிஞர் கூறினர். அது எந்த வீடு? ஆம்! நான் குடியிருந்த வீடே அது. அந்த வீட்டின் வாயிலிலேயே அக்கலைமகள் வேம்பின் அடியில் காட்சி தருகிறாள். இன்றும் எப்போதாவது அந்தப்பக்கம் செல்வேனாயின் என்னையுமறியாது என் கரங்கள் அத்தெய்வத்துக்கு அஞ்சலிசெய்யும்–மனம் வழிபாடாற்றும். அன்றுதொட்டு நான் எங்கே குடிபோனாலும் சொந்த வீடு கட்டினாலும் வீட்டின் புறத்தே வேம்பினை நட்டு வளர்த்து வருகிறேன். அதன்கீழ் உள்ள கலைமகள் எனக்குத் தோன்றாத் துணையாய் அமைகிறாள் என நம்புகிறேன்.

நான் அரச வீதியில் தங்கிய ஞான்று எனக்குப் பல புதிய அன்பர்கள் நண்பராயினர், பச்சையப்பர் உயர் நிலைப் பள்ளியில் பணியாற்றிய திரு. துரைசாமி ஐயர் என்பார் அவருள் ஒருவர், அவர்தம் காலங்கடவாக் கடப்பாடும், பழகும் முறையும் பண்பும் என் உள்ளங்கவர்ந்தன. காஞ்சியில் நெடுங்காலம் பொதுப்பணி செய்து சிறந்த பரமசிவ முதலியாரும், அவர் மகனார் கலியாணசுந்தரனாரும் எனக்கு