பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

காஞ்சி வாழ்க்கை


வாழ்வில்லை என்ற நிலையை உண்டாக்கிவிட்டார் அவர். இன்று அவர் பேசுவதையும் எழுதுவதையும் அறிபவர் அன்றைய அவர் செயலைக் கேட்டால் கொதிப்பர். நாடு முழுவதும் கிளர்த்து எழுந்தது. ‘இந்தி எதிர்ப்புப் போர்’ தமிழ்நாட்டில் வீறுகொண்டு நடைபெற்றது. பெரியார் அதில் முன்னணியில் இருந்தார். இன்றைய அமைச்சர் பலர் பிறவாத அந்த நாளில்—தமிழ் முழக்கம் செய்யும் நல்லவர் காணாத அந்த நாளில், ஆச்சாரியார் செயலுக்கு உள்ளாகி அல்லலுற்றார் பலர், காஞ்சியிலும் அத்தகைய கிளர்ச்சி எழுந்தது. பல கூட்டங்கள் நடைபெற்றன. நானும் பலவற்றில் பேசினேன். சிலவற்றில் தலைமை வகித்தேன். அதுபோது காஞ்சி நகரசபை காங்கிரஸ் ஆதிக்கத்தில்—திரு. டாக்டர் சீனிவாசன் அவர்கள் தலைமையில் இயங்கிற்று என எண்ணுகிறேன். நான் இந்தி எதிர்ப்புக் கூட்டத்திற்குத் தலைமை வகித்ததை அவர் பெருங்குற்றமாகக் கருதினார். படிக்கும் காலத்தில் நான் காங்கிரஸ் சார்பில் இருந்து, காந்தி அடிகள் தண்டி உப்புச் சத்தியாக்கிரகத்தின்போது செங்கற்பட்டில் பல கூட்டங்கள் நடத்தினேன். எனினும் பிறகு நான் அரசியலில் அதிகமான பங்குகொள்ளவில்லையானாலும் காங்கிரஸ் சார்பிலேயே இருந்தேன். அக்காலத்தில் நன்கு தெளிந்த, பொதுமக்களொடு தொடர்பு கொண்ட வேறு கட்சிகள் இல்லையாதலால் நான் மட்டுமின்றிப் பலரும் அவ் வண்ணமே இருந்தனர். எனினும் எதிலும் தீவிரமாகப் பங்கு கொள்ளவில்லை. இந்தி நுழையத் தொடங்கிய காரணத்தால், அந்த அடிப்படையில் அதைப் புகுத்திய கட்சிக்கு எதிராக நான் பல கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கலந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் அந்தப் பங்குகொள்ளும் நிலை காஞ்சியில் வாழ்ந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு–சிறப்பாக டாக்டர் சீனிவாசன் அவர்களுக்கு என்பேரில் வெறுப்புகொள்ளக் காரணமாயிற்று. அக் காலத்தில் அவர் சிறந்த மருத்துவராக இருந்ததோடு, நகர சபைத் தலைவராகவும், நிறைந்த செல்வாக்கு உடையவராக-