பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் அலைகள் தேர்தலும் தெளிதலும்

91


தனியாக நிற்க முடிவு கொண்டேன். இடையில் மற்றொரு சிக்கலும் இருந்தது.

செங்கற்பட்டு மாவட்டக் கழகத்துக்கு அத்தொகுதியின் சார்பில் பதினைந்து ஆண்டுகளாக உறுப்பினராக இருந்த ஒருவர் மறுபடியும் போட்டியிட நினைத்தார். காங்கிரஸ் சார்பில் ஒருவர், இவர், இவர்களுக்கிடையில் நாம் ஏன் தலையிட வேண்டும், ஒதுங்கிவிடலாம் என்று நான் எண்ணிய வேளையில் எனது அன்னையர் இருவரும் ஒருசேர நான் நின்றே ஆகவேண்டும் என வற்புறுத்தியதோடு பல ஊர்களிலிருந்து முக்கியமானவர்களை வரச்சொல்லி நான் நிற்கப் போவதையும் கூறிப் பறைசாற்றி விட்டார்கள். எவ்வளவு செலவானாலும் நின்று வெற்றிபெற வேண்டும் என அவர்கள் தீவிரமாக இருந்தார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

தொடர்த்து உறுப்பினராக இருந்து மேலும் நிற்க விரும்பியவரும் அவரைச் சேர்ந்தவர்களும் என்னையும் என் குடும்பத்தையும் இழிவாகப் பேசினர். வீட்டில் ஆண் துணை இன்மையாலும் நானும் இளையவனாய் எங்கோ பள்ளியில் ஆசிரியனாய் அதிலும் ‘தமிழாசிரியனாய்’ இருந்தமையாலும், நாங்கள் பெருஞ்செல்வர்கள் அல்லர் ஆதலாலும் ஊர்தொறும் அவர்கள் ஏளனப் பேச்சு அதிகமாயிற்று. அவற்றுள் ஒன்று–எங்கட்குத் தேர்தலுக்குச் செலவு செய்யப் பணம் கிடையாதென்றும் எனது அன்னையர் கழுத்தில் இட்டிருக்கும் நகைகளை (செயின்) விற்றுத் தான் செலவிட வேண்டுமென்று கூறியது. இக் கூற்றே என் அன்னையரை வெகுண்டெழச் செய்தது. சில ஊர்களுக்கு அவர்களே வந்து கூட எனக்கென வாக்குகள் கேட்டனர். மும்முனைப் போட்டியில் அந்த இருவரும் ஒருசேரப் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் நான் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியுற்றேன். ஆனால் இந்த வெற்றிக்கு உதவியவர் எத்துணையர்–பெற்ற அனுபவம் எத்தகையது! பல காட்சிகள் இன்-