பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் அலைகள் :- தேர்தலும் தெளிதலும்

77


பொற்காசுகள் வழங்க நேர்ந்தது. இத்தேர்தல் களத்தில் நேராகவே பேரறிஞர் அண்ணா அவர்களும் சட்டமன்றத் தலைவராக இருந்த புலவர் கோவிந்தன் அவர்களும் எங்களுடன் கலந்து கொண்டு ஊர் ஊராக வந்து ‘ஓட்டு’ கேட்ட காட்சி இன்றும் என்முன் நிற்கின்றது, அக்காலத்தில் (1935) காங்கிரஸ் ‘கட்சிக்கு எதிராக’ வேறு நல்ல அரசியல் கட்சிகள் இல்லையாதலாலும், ஒரு தமிழாசிரியர் அரசியலில் போட்டி இடுவது அதுவே முதல் தடவை ஆனதாலும், பேரறிர் அண்ணா அவர்கள் மகிழ்வோடு கலந்து எனக்கு வழிகாட்டியாக உதவினர். இவ்வாறு எத்தனையோ வகையில் அனைவர் தம் உதவியையும் பெற்றுத் தேர்தலிலே வெற்றி பெற்றேன். காஞ்சிபுரத்தில் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் முடிவை அறிவித்ததும் முதல் முதல் என்னைப் பாராட்டிக் கைகுலுக்கிப் பெருமைப்படுத்தியவர் டாக்டர் சீனிவாசன் அவர்கள் தாம். ஆம்! அதனால் அவர் தம் அரசியல் அறிவையும் தன்மையையும் அவர் புலப்படுத்திக் கொண்டார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதோடு நான் கற்றுக்கொண்ட பாடங்கள் பல.

அன்று நான் ஒரு திட்டமான முடிவினை மேற்கொண்டேன். ‘வருங்காலத்தில் இனி எக்காரணம் கொண்டும் எந்த வகையான தேர்தலிலும் என் ஆயுளில் போட்டி இடமாட்டேன்’ என்ற உறுதியே அது. அந்த உறுதியை இன்று வரையில் தளராது மேற்கொண்டு வருவதாகவே நான் எண்ணியுள்ளேன். பிற்காலத்தில் பல நிலையங்களில் பல வகையான இடங்களுக்குப் போட்டி இடவேண்டிய தேவைகளும் இன்றியமையா நிலைகளும் உண்டானபோதிலும் அவற்றையெல்லாம் தள்ளியே விலகி வருகிறேன். கல்வித் துறையிலும் கல்லூரிச் சார்பில் பல்கலைக்கழகப் பணிக்குச் செல்லும் நெறியிலும் கூட மிக எளிதாக போட்டி இல்லாமலும்கூட வரக்கூடிய வாய்ப்புகள் எங்கள் கல்லூரியிலும் பிற இடங்களிலும் இருந்தும் நான் அவற்றில் தலையிடுவதேயில்லை. பல்கலைக் கழக அறிஞர்குழு (Academic Council)