பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

காட்டு வழிதனிலே

சிறப்புக்கு உரிய ஒரு சிலருள் பாரதியார் முக்கியமாவர் என்பது என் கருத்து.

பாரதியாரின் சீரிய, எண்ணங்கள் உணர்ச்சி பொங்கும் கவிதைகள் நாட்டு விடுதலைக்கு மட்டுமல்ல, மற்ற எல்லா முன்னேற்றங்களுக்கும் உதவியாக நமக்குக் கிடைத்திருக்கின்றன. அவற்றில் பல இன்னும் நூல் வடிவிலே வெளிவராமலிருக்கின்றன. வெளி வந்தனவும் வராதனவுமான சில கருத்துக்களைத் திரட்டி இங்கே தருகின்றேன்.

பாரதியார் நேரான பார்வையை விரும்புகிறார். கோணல் பார்வை, சாய்ந்த தந்திரப் பார்வை அவருக்குப் பிடிக்காது. அவருடைய படத்தையே பாருங்கள். கண்கள் நம்மை ஊடுருவிப் பாய்வன போல ஒளிர்கின்றன. பெண்களுக்கும் நிமிர்ந்த பார்வையும் நேர்கொண்ட நன்னடையும் வேண்டுமென்பவர் அவர்.

மேலும் அவர் சொல்லுகிறார்:—

“சாமான்ய ஜனங்கள் கண்ணை முழுவதும் விழித்துப் பார்க்காமல் அரைப்பார்வையும் கோணற் பார்வையும் பார்க்கும்படி செய்கிற அஞ்ஞானத்தையும் பயத்தையும் பழிக்கிறேன்”

“பொய் இல்லாவிட்டால் பார்வை நேராகும்—கவனி!
பொய் தீர்ந்தால் நேரே பார்க்கலாம்.
பயம் தீர்ந்தால் நேரே பார்க்கலாம்—கவனி!
பொய் தீர்ந்தால் பயம் தீரும்.

பயம் தீர்ந்தால் பொய் தீரும்”

என்று அவர் முழங்குகிறார்.