பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

காட்டு வழிதனிலே

ஏதாவதொன்று தொட்டுவிட்டதானால், அதன் கற்பனையை ஏதாவதொன்று சுடர்விட்டெழச் செய்து விட்டதானால், அதற்காக எதையும் பலி கொடுக்கத் தயாராக இருக்கும். தயக்கமோ, சோர்வோ, பின் வாங்குதலோ இளமையின் இயல்பல்ல. ஏறமுடியாத மலைச் சிகரத்தின் மீது ஏறுதல், தாண்ட முடியாத மலைத் தாண்டுதல், எட்டிப் பிடிக்க முடியாத வானத்தை எட்டிப் பிடித்தல்—இவைகளே இளமையின் ஆர்வமிக்க முயற்சிகளாகும். “எண்ணித் துணிக கருமம்” என்பது மறை மொழியாயினும், எண்ணாது துணிவது இளமையின் இதயத் துடிப்பாகும்.

இமைதான் காதல் வளர்கின்ற பருவம். அதுவே கனவு காண்கிற காலம். எதிர்காலம் அதனுடைய நோக்கில் ஒளியுடன் விளங்குகின்றது. இளமையின் கண்களில் எல்லாம் ஒரே பசுமைதான்.

அழகும் இன்பமும் உயிர்த்துடிப்பும் விளங்குமிடத்திலெல்லாம் அவற்றை இளமையின் வடிவங்களெனக் காண்கிறேம். அழகும் இன்பமும் உயிர்த் துடிப்பும் நிறைந்துள்ள தமிழைக் கன்னித் தமிழ் என்கிறோம். என்றும் இளமையோடு, அழகோடு, ஆற்றலோடு, உயர்வோடு விளங்கும் இறைவனை இளமைக் கோலத்தில் தமிழ் நாட்டார் போற்றுகிறார்கள். முருகு என்ற சொல்லே இளமை, அழகு முதலிய தெய்வத் தன்மைகளைக் குறிக்கின்றது.

இளமையின் உள்ளம் எவ்வாறு துடிக்கிறதோ அதுபோலவே ஒரு நாட்டின் எதிர்காலம் உருவடையும். ஆதலால் இளைஞர்களைத் தன் வழியிலே