பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை என் காதலி

21

கிறது. அவனுடைய உள்ளம் வானிலே உயர்ந்து பறக்கிறது.

“தென்னையின் கீற்றைச் சலசல என்றிடச்
        செய்து வருங் காற்றே
உன்னைக் குதிரைகொண்டேகுமோர்

        உள்ளம் படைத்து விட்டோம்”

என்று பாடும் துணிச்சல் அவனுக்கு ஏற்படுகிறது.

காட்டுவெளியிலே உறவாட வா வென்றால் கவிதைப் பெண் எளிதிலே இணங்குவாள். தனிமையிலே அவளுக்கு விருப்பம் அதிகம். இயற்கையின் வளமும், பூரிப்பும் மிகுந்த தனியிடமென்றால் அங்கு அவள் நடமாடித் திரிய ஆசைப்படுவாள்.

அவளுடைய காதலை நாடி இப்படித் தனியிடத்திற்கு நான் ஒருநாள் சென்றேன். அவள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுவதற்குப் பெரியதோர் திட்டமிட்டுச் சென்றிருந்தேன். என் பேச்சைக் கேட்டதும் அவள் உரக்கச் சிரித்தாள்.

“அகராதியை மனப் பாடம் செய்துகொண்டு வந்துவிட்டாயா?” என்று அவள் ஏளனமாகக் கேட்டாள். “கவிதைத் தேவியே, சொல்மாலை தொடுத்து அணிய வந்திருக்கிறேன்; ஏற்றருள வேண்டும்'” என்று நான் வேண்டினேன்.

“என்னுடைய நேசம் வேண்டுமானால் செத்துப் போன நிகண்டுப் பேச்சை மறந்துவிடு; உனது உணர்ச்சியை அப்படியே வெளிப்படுத்தும் உயிருள்ள பேச்சைத்தான் நான் விரும்புகிறேன்” என்று கண்டிப்பாகச் சொன்னாள்.

2