பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

காட்டு வழிதனிலே

ஹாஸ்ய விலாசம் என்ற தலைப்பிட்டே பாரதியார் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதிகாரிகள் செய்யும் காரியங்கள் பல சமயங்களிலே மிக வேடிக்கையாக இருக்கும் என்று அதிலே அவர் ஒரு சம்பவத்தை எடுத்துக் காட்டிச் சிரிக்கிறார். அவர் எழுதுகிறார் “கணக்குப் பதிவாளரின் அதிகாரத்தில் ஏற்படும் விசித்திரங்கள் கணக்கில்லாதன. யுத்தத்தில் ஒரு மனிதன் செத்து விட்டதாகக் கணக்குப் பண்ணி விட்டார்கள். பிறகு அவனே அந்தக் கணக்குக் கூடத்துக்கு வந்து, தான் உயிரோடிருப்பதாகவும், தன்னை இறந்ததாகக் கணக்கிட்டது தவறென்றும் தெரிவித்தான். அதற்கு அதிகாரி, “போ, போ, இங்கு நில்லாதே ! நீ செத்துப் போனதாக நாங்கள் பதிவு செய்தாய் விட்டது. இனி நீ வந்து அதனை மறுப்பதில் பயனில்லை. ஓடிப்போ” என்று துரத்தினர். இது உண்மையாக நடந்த செய்தி. மஹாயுத்த காலத்தில் நடந்தது. அதிகாரிகள் இத்தகைய காரியங்கள் செய்வதில் சமர்த்தர்.”

இம்மாதிரி பாரதியாருடைய உரைநடை நூல்களிலே நகைச்சுவை பல இடங்களிலே வெளிப்படுகின்றன. அவற்றைச் சந்தர்ப்பத்தோடு சேர்த்துப் படிக்கும்போது மிகவும் இன்பம் பெறுகின்றோம்.

வாழ்க்கை இன்பத்தைப் பெருக்குவதில் நகைச்சுவைக்குச் சிறந்ததோர் இடமுண்டு. நாம் அதைப் போற்ற வேண்டும். அதை உயர்ந்த இலக்கிய வழியிலே நமக்குக் கொடுத்தவர்களில் பாரதியாரும் ஒருவராவார்.